இன்ஸ்டாவுக்கு இடம் பெயரும்.. டிக்டாக் ஜீவராசிகள்..! முடித்துவைத்த யோகிபாபு

0 22490

சீனாவின் டிக்டாக், சேர் இட், ஹலோ உள்ளிட்ட 59 செல்போன் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில் சம்பந்தபட்ட, சீன செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இதனால் டிக்டாக் பயனாளர்கள், இன்ஸ்டாகிராம் பக்கம் இடம் பெயர தொடங்கி இருப்பதாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடியனான யோகிபாபுவிற்கு நேரடியாக டிக்டாக்கில் கணக்கு இல்லாத நிலையில் ஜெயில் பட பாடலுக்கு யோகிபாபு கொடுத்த ரெஸ்பான்ஸை வீடியோவாக்கிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அதனை தனது டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த நேரம் அன்றே டிக்டாக்கிற்கு மத்திய அரசின் தடை விழுந்து விட்டது...

யோகிபாபுவின் பாடல் ரியாக்சன் 60 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பாடலால் தான் டிக்டாக் குளோஸ் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

டிக்டாக்கை வேற்று கிரகமாக நினைத்து வாழ்ந்து வந்த பயனாளர்கள், டிக்டாக் தடை செய்யப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் கண்கலங்கி நிற்கின்றனர்...

ஆனால் சிலரோ, திரிஷா இல்லன்னா நயந்தாரா என்ற ரீதியில் டிக்டாக் இல்லன்னா இன்ஸ்டாகிராம் என்று அங்கு இடம் பெயர தொடங்கி விட்டனர்.

ஒருவர் டிக்டாக்கில் இருந்து இன்ஸ்டாகிராமுக்கு செல்வதாகவும், அங்கும் வந்து ஆதரவு தருமாறும், டிக்டாக்கில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

எப்போதும் ஊருக்கே வணக்கம் வைக்கும் ஷீலா என்பவர் டிக்டாக்கை யாரும் அன் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் அதை மீண்டும் கொண்டு வருவோம் என்றும் குரல் கொடுத்து வருகிறார்..

கருப்புச் சட்டை அணிந்த டிக்டாக் போராளி ஒருவர், சீனாவின் 59 செயலிகளை தடை செய்தது போல சீன செல்போன்கள் மீது தடை விதிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் தடையை தொடர்ந்து டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளும் கூகுல் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. மற்ற செயலிகளை விட டிக்டாக்கை தூக்கியதை தான் ஒரு சாரார் கொண்டாடிவருகின்றனர். ஒட்டு மொத்தமாக மேற்கண்ட செயலிகளின் செயல் பாட்டை முற்றிலும் முடக்கினால் மட்டுமே தடை உத்தரவு பலனளிக்கும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments