நவம்பர் வரை இலவச ரேசன் பொருட்கள் - பிரதமர் மோடி

0 10314
கொரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம்

ஏழை எளிய மக்களுக்கு ரேசன் கடைகளில் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். 

ஊரடங்கு தளர்வின் இரண்டாம் கட்டம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், உரிய நேரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் நிலைமை சீராகவே இருப்பதாக குறிப்பிட்டார். கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போதும் இந்தியாவின் நிலை ஸ்திரமாக இருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஊரடங்கின் முதல் கட்ட தளர்வு தொடங்கிய பின்னர் மக்களிடையே கவனக்குறைவும், சமூக செயல்பாடும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். அதற்கு முன்பு முக கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றில் எச்சரிக்கையாக இருந்தோம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஊரடங்கு தளர்வின் 2வது கட்டத்திற்குள் செல்ல இருப்பதால், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறுவோரை கண்டால், அவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 3 மாதங்களில் 20 கோடி ஏழை குடும்பத்தினரின் வங்கி கணக்குகளில் 31 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், 9 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் மோடி சுட்டிக்காட்டினார்.

பிரதம மந்திரி கரீப் கல்யான அன்ன யோஜனா என்ற திட்டம் வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக கூறினார். இதன் மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதற்கான பெருமை விவசாயிகள் மற்றும் வரி செலுத்துவோரையே சேரும் என்று தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு தாம் இதயப்பூர்வமாக நன்றி தெரிவிப்பதாக கூறினார். பொருளாதார செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று கூறிய பிரதமர், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய உள்நாட்டு பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments