ஆறுதல் சொல்ல சென்றதற்கு விளம்பரம் ... கே.எஸ். அழகிரியை சுற்றும் சர்ச்சை!

0 5475


சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நிதியுதவி அளிக்கப்பட்டது. இதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று சாத்தான்குளத்துக்கு நேரில் சென்று ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை ஜெயராஜ் குடும்பத்தினரிடத்தில் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடத்தில் பேசிய அழகிரி , “சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த இரட்டைக்கொலை போலீஸாரால் நடத்தப்பட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. கொல்லப்பட்ட இருவருமே எந்தவிதமான குற்றப்பின்னணியும் இல்லாதவர்கள். எனவே அவர்களுடைய மரணத்திற்கு நீதி வேண்டும் . சி.பி.ஐக்கு வழக்கை மாற்றுவது உள்நோக்கம் கொண்டது ’’ என்று கூறினார்.

இதற்கிடையே, ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தர வரவிருப்பதாக கே.எஸ். அழகிரி புகைப்படத்துடன் நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும், குறிப்பிட்ட சாதி பெயரும் விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது .விளம்பரத்தில் கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மற்றும் விஜயதாரணி உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏக்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன. 'இதற்கெல்லாம் கூடவா பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பார்கள்' என்று சமூகவலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சி விமர்சனத்துக்குள்ளானது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணாவிடத்தில் கேட்ட போது ,'' சாத்தான்குளத்தில் இறந்தவரின் பெயரே ஜெயராஜ் நாடார் என்பதுதான் . எந்த பெயரில் அழைக்கப்பட்டோரோ அதே பெயரில்தான் நாங்கள் விளம்பரம் கொடுத்துள்ளோம் . காமராஜ் நாடார்னுதான் முதல்ல காமராஜர் அழைக்கப்பட்டார். பிறகுதான், பெருந்தலைவர் காமராஜர் ஆனார். கிருஷ்ண ஐய்யர், ஷிவ நாடார் , ராமசாமி படையாச்சி என்று அழைப்பதை போலத்தான். போலத்தான் ஜெயராஜ் நாடார் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கே.எஸ். அழகிரி வருக வருகனு விளம்பரத்தில் சொல்லப்படவில்லை. எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் விளம்பரம் செய்யவில்லை. இப்போது, கே.எஸ். அழகிரியை எடுத்துக்கொண்டால், அவரின் சாதிப் பெயரை தன் பெயருடன் அவர் சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால், நாங்கள் கே.எஸ். அழகிரி என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம். இதையெல்லாம், பெரிது படுத்த வேண்டிய அவசியமில்லை'' என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments