'தீவிரவாதிகளுடன் போரிட்டு 70,000 பாகிஸ்தானியர்களை இழந்தோம்! ''பின்லேடனுக்கு புகழாரம் சூட்டி இம்ரான் வேதனை

0 7768

'பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாகப் பாகிஸ்தான் திகழ்கிறது.  இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானைக் குறிவைத்து செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை' என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின்  சமீபத்தில் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கை பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது.  உடனடியாக, எதிர்ப்பு தெரிவித்த  இம்ரான்கான், பின்லேடனை தியாகி என்று புகழும் அளவுக்கு போய் விட்டார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இம்ரான்கான்,  "பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு உதவியதால், இப்போது பாகிஸ்தான் அவமதிப்பை  சந்திக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்கான விமர்சனத்தையும் எதிர்கொள்ளும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. நமது நாட்டில் உள்ள அபோதாபாத் பகுதிக்குள் நுழைந்து ஒசாமா பின்லேடனைக் கொன்றார்கள். நமக்கு அது பற்றி ஒரு தகவல் கூட தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தியது. இரு நாட்டுக்குமிடையேயான உறவில் விரிசல் விழ இது காரணமாக இருந்தது.  அமெரிக்காவின் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இதுவரை சுமார் 70,000 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்" என்று பதிலடி கொடுத்தார்.

இம்ரானின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இதே இம்ரான் கான் தான்  கடந்த 2019 - ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது, “பின் லேடனைக் கண்டுபிடிக்க பாகிஸ்தனின் உளவுத் துறைதான் தகவல் அளித்து உதவியது” என்று கூறி  பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுவது போன்றும் ஒரு தோற்றத்தை உருவாக்கியதும் உண்டு.

இம்ரான்கானின் எதிர்ப்பாளர்கள் கூறுகையில், ''இம்ரான் கானுக்கு மற்றொரு பெயரும் உண்டு அதுதான், 'தாலிபான் கான்'. பல நேரங்களில் அடிப்படைவாத அமைப்புகளுக்கும் அதன்  தலைவர்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பதே இந்த பெயருக்கு காரணம்.   இம்ரான் கான் தான் தலிபான்களின் தீவிரவாதச் செயல்களை ஆதரித்தார்.  கிரிக்கெட் வீரர், அரசியல்வாதி, மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளை என  தன்  வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு பெயரைப் பெற்றிருக்கும் இம்ரான் கான்  இஸ்லாமிய தேசங்களின் மதிப்பு மிக்க மதப்பற்று கொண்ட பிரதமராக வெளிக்காட்டிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

'நயா பாகிஸ்தான்' (புதிய பாகிஸ்தான்) எனும் முழக்கத்தை முன்வைத்து, நாட்டில்  ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று போலியாக உறுதியளித்து பாகிஸ்தானில் பிரதமரானார் இம்ரான்கான்.  பிரதமரானார் என்பதை விடவும் ஐ.எஸ்.ஐ அமைப்பால்  பிரதமராக ஆக்கப்பட்டார் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும் இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் இம்ரான் கான், அவரின் ஆட்சியில் நடைபெறும்  கட்டாய மதமாற்றங்கள், இனரீதியிலான பாகுபாடு குறித்து வாயைக் கூடத் திறக்கமாட்டார்'' என்கின்றனர்

இம்ரான்கானின் பேச்சுக்கு  பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 'தீவிரவாதத் தலைவனை  நம் பிரதமர் தியாகி  என்று புகழ்கிறார்'   என்று பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும், இம்ரான்கான் எதையும் கண்டு கொள்ளப் போவதில்லை. பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு காஷ்மீர் எப்படி ஒரு கண்ணோ... அதேபோல தீவிரவாதிகள் மற்றோரு கண்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments