உலகப்புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் கோவில் ரத யாத்திரை தொடங்கியது

0 4357

இந்தியாவின் மிகப்பெரிய சமயத் திருவிழாக்களில் ஒன்றான பூரி ஜகந்நாதர் கோவில் ரத யாத்திரை, தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பல லட்சக் கணக்கான பக்தர்கள் சங்கமிக்கும் இந்த தேர்த் திருவிழா, கொரோனா தொற்று காரணமாக, உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் பொதுமக்கள் பங்கேற்பின்றி, நடைபெற்று வருகிறது. 

ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் அமைந்துள்ள பழம்பெரும் வைணவ ஆலயமான கெகந்நாதர் கோயில் உலகப் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்ரா தேவி ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று தெய்வங்களுக்கு, சுமார் 85 டன் எடை கொண்ட மரத் தேர் புதிதாக செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் சுமார் இரண்டரை கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது.

கொரோனா காரணமாக, உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளால், இந்த ஆண்டு பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஜகந்நாதர், பலராமர், சுபத்திரை தேர் ஒவ்வொன்றையும், பூசாரிகள், அதிகாரிகள், போலீசார் என 500 பேர் அளவிலேயே இழுக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு நிபந்தனை விதித்துள்ளது. மேலும் பூரி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 தேர்களையும் இழுக்கும் 700 பூசாரிகளுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 425 ஆண்டுகளில் படையெடுப்பாளர்களால் 32 முறை ரத யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா படையெடுப்பு இருந்தபோதிலும் கட்டுப்பாடுகளுடன் பூரி ஜகந்நாதர் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments