உறைய வைக்கும் பனியில்.. பயிற்சி பெறும் வீரர்கள்..!

0 4077

கடினமான மலைப்பகுதிகளிலும் அனாயசமாகச் சண்டையிடும் திறன்பெற்ற இந்திய ராணுவம், அதற்காக மேற்கொள்ளும் கடினப் பயிற்சி குறித்து விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...

காஷ்மீரின் வட எல்லைகள் தொடங்கி அருணாச்சலப் பிரதேசம் வரை  2 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரம் வரை எல்லைப் பாதுகாப்புப் பணியில் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த எல்லைப் பகுதியில்தான் சீனா, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

பெரும்பாலான இடங்களில் இருநாட்டு ராணுவவீரர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் இடங்களாகவே உள்ளன. இதுபோன்ற இடங்களில்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு ஏற்பட்டதுதான் லடாக் மோதல்.

இந்தச் சூழ்நிலையில்தான், மலைப்பகுதிகளில் போரிடும் திறமையும், அனுபவமும் வாய்ந்த நாடு அமெரிக்காவோ, ரஷ்யாவோ அல்ல என்று குறிப்பிட்டுள்ள சீன ராணுவ இதழின் ஆசிரியர் குவாங் குவொஷி, அத்தகைய திறமை இந்திய ராணுவத்திற்கு மட்டுமே உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். அதற்காகவே அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் குவாங் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் இப்படிப்பட்ட கட்டமைப்பை உடனடியாக செயல்பாட்டுக் கொண்டுவந்துவிடவில்லை. 1970களில் இருந்தே இந்திய ராணுவம் மலைப்பகுதி மற்றும் அது சார்ந்த கடினமான காடுகளில் தனது எல்லைகளைப் பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சியை அளித்து வருகிறது. இதற்காக சாதாரண வீரர்கள் மட்டுமின்றி ராணுவத்தின் உயர் அதிகாரிகள் கூட இந்தப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். நடுங்க வைக்கும் பனி, உறைய வைக்கும் குளிர் போன்ற காலநிலையைப் பொருட்படுத்தாமல் நமது ராணுவத்தினர் இதற்கான பயிற்சி எடுத்து வருகின்றனர்.

தற்போது மலைப் பகுதியில் போரிடுவதற்கும் தயாராக 2 லட்சம் இந்திய வீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை உலகிலேயே அதிகம் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வீரர்களுடன் ஏராளமான துணை ராணுவப் படையினரும் உதவிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படையினர் பீடபூமி, கணவாய்கள், பள்ளத்தாக்குகள் என அனைத்து வகையான நிலப்பரப்பிலும் சண்டையிடக்கூடிய திறன் பெற்றவர்கள். இதற்காகவே அவர்களுக்கு ஹை மவுண்டன் வார்ஃபேர் என்ற பள்ளியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதைவிட இந்திய இராணுவத்தின் மலை யுத்த வலிமையின் பிரதான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிப் பிரதேசம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ள இந்த இடத்தில் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி வரை இருக்கும் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. இங்கு மட்டும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலிலும் போரிடும் வண்ணம் அவர்கள் சிறப்பான ஆயுதங்களையும் கொண்டுள்ளனர்.

இத்தனை திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கும் வரை பாகிஸ்தான், சீனா மட்டுமின்றி உலகின் எத்தகைய நாட்டையும் எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments