முழு ஊரடங்கால் முடங்கியது சென்னை மாநகரம்..!

0 2790

முழு ஊரடங்கின் முதல்நாளிலேயே சென்னை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. சாலையில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் நடமாட்டம் இருந்தது. 

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நேற்றுமுதல் 12 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால் சென்னை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. அண்ணா சாலை, காமராஜர் சாலை, வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலை உள்பட 280 முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.

தடையுத்தரவை மீறி சாலையில் சென்ற சுமார் இரண்டாயிரம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து இரண்டாயிரத்து 400க்கும் மேற்பட்ட வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.

நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டனர். முக்கிய சாலைகளை இணைக்கும் பாலங்களும் மேம்பாலங்களும் மூடப்பட்டிருந்தன.

பல்வேறு சாலைகள் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. வர்த்தகப் பகுதிகளான தி.நகர், அண்ணாநகர், புரசைவாக்கம், ரிச்சி தெரு, கொத்தவால் சாவடி போன்றவையும் அடைக்கப்பட்டிருந்தன.

காலை 6 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை காய்கறி மளிகை,பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அதிக அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் காலையிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டது.ஒட்டு மொத்த சென்னையும் நேற்று முழுதாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments