கோவில் பூசாரி வீட்டில் 100 சவரன் நகை, ரூ.35 லட்சம் கொள்ளை.. முகமூடி கும்பல் கைவரிசை..!

0 4203

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி அருகே கோவில் பூசாரி குடும்பத்தினரை கட்டிப்போட்டு 100 சவரன் நகை, 35 லட்சம் ரூபாய் பணத்தை ஏழு பேர் கொண்ட முகமூடி கும்பல் கொள்ளையடித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சிக்குட்பட்ட சுக்காம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் துரைஆதித்தன். தனக்கு சொந்தமான நிலத்தில் வாஸ்தீஸ்வரர் என்ற பெயரில் கோவிலை கட்டி, அதில் பூசாரியாகவும் இருந்து வருகிறார். கோவில் அருகிலேயே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வீடு கட்டுவதற்கான வாஸ்து பார்ப்பது, குறி கேட்பது போன்ற காரியங்களுக்கான அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இவரை நாடி வருவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் சித்தர் என்றும் துரை ஆதித்தன் அந்த பகுதியில் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் இன்று மதியம் தனது குடும்பத்துடன் துரை ஆதித்தன் வீட்டில் இருந்த போது டவேரா காரில் ஏழு பேர் கொண்ட முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

பூசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரையும் பிளாஸ்டிக் டேக் மூலம் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றதாக சொல்லப்படுகிறது.

தகவலறிந்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பூசாரி துரை ஆதித்தன் கைகள் கட்டப்பட்ட நிலையில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

அதன் பிறகே அவரது கை கட்டுகள் அகற்றப்பட்டன. வீட்டில் இருந்தவர்களிடம் கொள்ளை நடந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments