கொரோனா தொற்றுக்கு பலியான பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் !

0 19200

பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இனிமையான பாடல்களால் மக்களின் மனம் கவர்ந்த பல்குரல் வித்தகரின் திரையுலக பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தமிழ் திரை உலகில் பல் குரல் பாடகர் என்ற சிறப்பு பெற்றவர் பழம்பெரும் பாடகர் ஏ.எல். ராகவன். பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்தை திருமணம் செய்து வாழ்ந்து வந்த ஏ.எல்.ராகவன் அண்மைக்காலமாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் 1933ல் பிறந்தவர் ஏ.எல்.ராகவன். 1950ம் ஆண்டில் கிருஷ்ண விஜயம் எனும் படத்தில் இசையமைப்பாளர் சி.எஸ்.ஜெயராமனால் இளம் பாடகராக திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

தொடர்ந்து சி.எஆர்.சுப்புராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், ஏ.எம்.ராஜா உள்பட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடி திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தார்

1980ம் ஆண்டு வரை திரையுலகில் கோலோச்சிய ஏ எல் ராகவன், எங்கிருந்தாலும் வாழ்க.., என்ன வேகம் நில்லு பாமா.. போன்ற நூற்றூக்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியவர். பழம் பெரும் நடிகர் ஜெமினிகணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.

குழந்தை பாடகராக அறிமுகமாகி, நகைச்சுவை நடிகர்கள் தொடங்கி ஜெய்சங்கர், முத்துராமன் , ரவிச்சந்திரன் என அக்கால நவரச நாயகர்களின் படங்களில் இனிய பாடல்களுக்கு தனது குரல் வளத்தால் பெருமை சேர்த்தவர் ஏ.எல்.ராகவன்.

பாடகராக மட்டுமல்லாமல் அலைகள், அகல்யா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் ராகவன் நடித்துள்ள ஏ.எல்.ராகவன் மறைந்தாலும் காலத்தால் அழியாது அவரது குரல் வளம் மிக்க பாடல்களால் அவர் என்றென்றும் மக்கள் மனங்களில் நிலைத்து வாழ்வார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments