கால்வன் பள்ளத்தாக்கிற்கு சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது-இந்தியா திட்டவட்டம்

0 6040

லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கிற்கு, சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது என இந்தியா கூறியுள்ளது. கடந்த 6ஆம் தேதி பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு எதிராக சீனா நடந்துகொள்வதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த 6ஆம் தேதி, இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகளிடையே, லெப்டினன்ட் ஜெனரல் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், பாங்கோக்சோ ஏரி, கால்வன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர உடன்பாடு ஏற்பட்டது.

சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, ஏற்கெனவே இருந்த நிலை மீட்டமைக்கப்பட வேண்டும், மோதல் போக்கு ஏற்பட்டுள்ள இடங்களில் இருந்து சீன வீரர்கள் விலகி தங்களது கட்டுப்பாட்டு பகுதிக்குள் திரும்ப வேண்டும் என இந்தியா வலியுறுத்தி இருந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவடைந்ததால்தான், கால்வன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த சீனக் கூடாரங்களை அகற்ற சிறிய எண்ணிக்கையிலான இந்திய வீரர்கள் சென்றுள்ளனர்.

இந்த கூடாரங்களை அகற்ற ஜூன் 6ஆம் தேதி பேச்சுவார்த்தையின்போது சீன தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில்தான் இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போதுதான் கடும் மோதல் மூண்டு, சீன வீரர்கள் இந்திய ராணுவ கர்னல் சந்தோஷ் பாபுவைக் குறிவைத்துள்ளனர். இரும்பு ராடுகள், ஆணிகள் பதிக்கப்பட்ட கட்டை, கற்களை கொண்டு தாக்கியதில் இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் ஏற்பட்டன.

திங்கட்கிழமை நேரிட்ட இந்த மோதல்-வன்முறைக்கு, சீன வீரர்களின் முன்கூட்டியே திட்டமிட்ட செயல்தான் காரணம் என சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும், கால்வன் பள்ளத்தாக்கிற்கு உரிமை கொண்டாடும் வகையில் சீன ராணுவம் கூறிய கருத்திற்கு, இந்திய வெளியுறவு அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையை பொறுப்புடன் கையாள வேண்டும் என இரு தரப்பும் ஒப்புக் கொண்ட நிலையில், ஜூன் 6ஆம் தேதி மூத்த ராணுவ அதிகாரிகள் நிலையில் ஏற்பட்ட உடன்பாடு, நேர்மையாக அமல்படுத்தப்பட வேண்டும் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளார். இதற்கு மாறாக, மிகைப்படுத்தப்பட்ட முறையில், ஏற்க முடியாத வகையில், லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கிற்கு, சீனா உரிமை கோருவது தவறு என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments