சில தினங்களுக்கு முன் பிறந்த குழந்தை; போனிலேயே பெயர் சூட்டிய வீரர்; முகத்தைப் பார்க்க விடாமல் உயிரை பறித்த கல்வான்!

0 4136
மனைவியுடன் ந்தன் குமார் ஓஜா

லடாக், கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்த 26 வயதான குந்தன் குமார் ஓஜா எனும் வீரருக்கு 18 - நாள்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குந்தன் குமார் ஓஜா, தன் குழந்தையின் முகத்தை ஒருமுறை கூட நேரில் பார்க்காமலேயே வீர மரணத்தைத் தழுவியிருக்கும் நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம், சாஹிப்கன்ஞ் மாவட்டத்தில் டிகாரி கிராமத்தைச் சேர்ந்தவர், குந்தன் குமார் ஓஜா. 2011 - ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பீகார் ரெஜிமென்ட் பிரிவில் வீரராகச் சேர்ந்தார். 26 வயதான குந்தன் குமார் ஓஜாவுக்கு 2018 - ம் ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. 18 நாள்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது. 15 நாள்களுக்கு முன் கடைசியாகப் பேசியபோது, தொலைபேசி வாயிலாகக் குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட குந்தன் குமார் ஓஜா, மகளுக்கு ' தீக்ஷா' என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார். விரைவில் தனது மகளை நேரில் வந்து பார்ப்பதாகவும் சொல்லியுள்ளார். ஆனால், ஒரு முறை கூட குழந்தையை நேரில் பார்க்காமலே சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் குந்தன்குமார் வீர மரணம் அடைந்துஅவிட்டார்.

கடைசியாகத் தனது மனைவியுடன் பேசியபோது, "எல்லையில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பதற்றம் தணிந்த பிறகு உடனே ஊருக்கு வந்துவிடுகிறேன்" என்று பேசியுள்ளார். ஆனால், "சொன்னபடி திரும்பி வராமலே போய்விட்டார்" என்று கதறுகிறார்கள் குந்தன் குமாரரின் குடும்பத்தினர். ஐந்து மாதத்துக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கிறார் குந்தன் குமார் ஓஜா. இதற்கிடையே சீனாவுடன் எல்லையில் மோதல் முற்றியதால். அவரின் குடும்பத்தினர் ஒரு வித பதற்றத்தில் இருந்தனர். குந்தன் குமாரின் போன் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், குடும்பத்தினருக்கு குந்தன்குமாரின் இறப்புச் செய்தியே கிடைத்திருக்கிறது.

இந்தத் துயர சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்திருக்கும் ஜார்க்கண்ட் மாநில முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன், "நாம் நமது பெருமை மிகுந்த ஜார்கண்ட்டின் மகனை இழந்திருக்கிறோம். சீனாவுடன் ஏற்பட்ட சண்டையில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம். ஜார்கண்ட் அரசு குந்தன் குமார் குடும்பத்துடன் எப்போதும் துணை நிற்கும்" என்று கூறியுள்ளார்.

பிறந்த குழந்தையின் முகத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த ராணுவ வீரர், குழந்தையின் முகத்தைக் காணமலே வீர மரணத்தைத் தழுவியிருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா - சீனா எல்லையில் லடாக்,கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவம் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தார்கள் . சீன தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வராவிட்டாலும் சுமார் 35 பேருக்கும் மேல் இறந்திருக்கலாம் என்று சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments