இந்தியாவும் ஜப்பானும் இணைந்து மேற்கொள்ளும், நிலவு திட்டம்

0 2641

இந்தியாவும் ஜப்பானும் இணைந்து மேற்கொள்ளும், நிலவின் தரையில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்யும் திட்டம் 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா தெரிவித்துள்ளது.

நிலவு துருவ ஆய்வுத் திட்டத்தை இந்தியாவும்-ஜப்பானும் இணைந்து செயல்படுத்த உள்ளன. இந்த திட்டம் தொடர்பான விவரங்களை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா வெளியிட்டுள்ளது.

நிலவில்தரையிறங்கும் லேண்டர், லேண்டரில் இருந்து வெளிப்பட்டு நிலவின் தரையில் ஆய்வு செய்யும் ஆய்வூர்தி ஆகிய இரண்டும் இத்திட்டத்தில் இடம்பெறுகிறது. ஜாக்சா வரைபடங்களின்படி, தரையிறங்கும் கலத்தையும், ஆய்வூர்தியையும் ஜப்பான் தயாரிக்கிறது. தரையிறக்கும் அமைப்பை இஸ்ரோ தயாரிக்க உள்ளது. ஜப்பானில் இருந்து, மிட்சுபிஷி தயாரிப்பான ஹெச்3 ராக்கெட் மூலம் இந்த திட்டம் ஏவப்பட உள்ளது.

நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருக்கலாம் என கருதப்படும் நிலையில், நீர் வளம் எந்த வடிவில், என்ன அளவில் உள்ளது எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கு அந்த நீர் வளத்தை பயன்படுத்த முடியுமா என்பதை இஸ்ரோவுடன் இணைந்து ஆய்வு செய்ய உள்ளதாக ஜாக்சா தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தியானது, தண்ணீர் விரவியிருக்கலாம் என கருதப்படும் பகுதியில் வேதித் தனிமங்களை ஆய்வு செய்து, ஹைட்ரஜனை கண்டறிந்தால், அப்பகுதியில் மாதிரிகளை சேகரித்து தண்ணீர் இருப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் என ஜாக்சா விளக்கம் அளித்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ மூழ்கியுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜாக்சா கூறியுள்ளது.

நிலவின் தரையில் விக்ரம் லேண்டரை பதமாக தரையிறக்கும் இஸ்ரோவின் முயற்சி வெற்றிபெறவில்லை. விக்ரம் லேண்டர் லேசாக திசைமாறி நிலவின் தரையில் விழுந்துவிட்டது. இந்நிலையில், இஸ்ரோவும்-ஜாக்சாவும் இணைந்து கூட்டாக நிலவு ஆய்வூர்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளன.

இந்த முயற்சி வெற்றிபெற்றால், சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு, நிலவின் தரையில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கிய நாடுகளாக இந்தியா - ஜப்பான் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments