காதல் கசந்தால்.. கடப்பாரை தான்..! காதல் மனைவியை கொன்ற கொடூரன்

0 21614

காஞ்சிபுரம் அருகே, காதலித்து கரம் பிடித்த மனைவியை, குடிபோதையில் கணவனே கடப்பாரையால் தலையை பிளந்து கொன்ற கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவன் அரிகிருஷ்ணன். கட்டிட வேலை செய்து வந்த அவன், தன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த தேவி என்ற பெண்ணை மூன்று வருடங்களாக விரட்டி விரட்டிக் காதலித்துள்ளான்.

பிளஸ் டூ முடித்துவிட்டு பெங்களூரில் நான்கு வருட செவிலியர் படிப்பில் சேர்ந்த தேவியை விடாமல் துரத்தி காதல் வலையில் வீழ்த்தியுள்ளான் அரிகிருஷ்ணன். இவனது நடவடிக்கை பிடிக்காததால் இரண்டு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் எங்கே தேவி தனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற பயத்தில் ஏழு மாதங்களுக்கு முன்பு, பெங்களூரில் இருந்த தேவியை கட்டாயப்படுத்தி காஞ்சிபுரத்திற்கு அழைத்து வந்த ஹரி கிருஷ்ணன் திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளான்.

ஒருகட்டத்தில் தேவி வெறுத்து ஒதுக்கியபோது, அவர் இல்லாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகக் கூறி மனம் மாற்றியுள்ளான் ஹரிகிருஷ்ணன்.

இருவரும் ஒருவரையொருவர் விரும்பியதால், பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து அறிவுரையும் ஆலோசனையும் வழங்கப்பட்டு இரு வீட்டார் சம்மதத்துடன் தேவிக்கும் அரிகிருஷ்ணனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த நாள் முதலே, தன்னை ஏன் காதலிக்காமல் அலைய விட்டாய்
எனக்கேட்டு தேவியை மது போதையில் அரிகிருஷ்ணன் அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

தனது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த யாரிடமும் பேசக்கூடாது, வெளியே போகக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளான் அரிகிருஷ்ணன். 4 மாத கர்ப்பிணியான நிலையிலும், தேவி தனது கணவன் விருப்பபடியே நடந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த அவன் தனது மனைவியிடம் மீண்டும் வம்பிழுத்துள்ளான். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கர்ப்பிணி என்றும் பாராமல் கடப்பாரையை எடுத்து திடீரென தேவியின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளான் அந்த கொடூரன். இதில் தேவி மண்டை பிளந்து மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகின்றது.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், தேவியின் சடலத்தை கைப்பற்றிய பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் பிணக்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடப்பாரையுடன் பதுங்கியிருந்த ஹரிகிருஷ்ணனையும் கைது செய்தனர்.

தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான வயதில் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர், அவர்களின் திருமணத்தையும் சரியான நேரத்தில் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை வேண்டும். அதற்குள்ளாக, காதலிப்பது போல நடிக்கும் ஹரிகிருஷ்ணன் போன்ற ரோமியோக்களை நம்பி வாழ்க்கையை ஒப்படைக்கும் பெண்களுக்கு என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த கொடூர சம்பவம் ஒரு உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments