'' தன் உடலை எப்படி அடக்கம் செய்கிறார்கள், என்று அந்த ஆன்மா பார்க்கும் !''- 1000 சடலங்களை நல்லடக்கம் செய்த மணிமாறன் சொல்கிறார்

0 24355


கொரோனாவின் கோரத்தாண்டவத்தால், இந்தியாவில் இதுவரை 7,000- க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்து இறப்பவர்களை அடக்கம் செய்வதிலும் அலட்சியம் காட்டப்படுகின்றன. கொரோனா பாதித்து இறந்த சென்னையை சேர்ந்த டாக்டர். சைமன் ஹெர்குலஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவரின் உடல் கடும் வேலங்காடு மயானத்துக்க கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.

கொரோனா பலியானவர்களின் உடல் முற்றிலும் மூடி பேக் செய்யப்பட்டு உலக சுகாதார iமையம் அளித்துள்ள வழிமுறையின்படி பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட வேண்டும். தகுந்த மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், ஆங்காங்கே கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களுக்கு அவமதிப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் ,பாண்டிச்சேரியில் கொரேதானாவால் இறந்தவரின் சடலத்தை குழிக்குள் தாடாலடியாக வீசி சென்ற சம்பவம் இதற்கு நல்ல உதாரணம். இப்படியான, சம்பவங்கள் இனிமேல் நடக்க கூடாது. கொரோனா நோயாளிகளின் உடல்களை தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் ஆசை. கொரோனா பாதித்து இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய தங்கள் குழுவினர் தயாராக இருப்பதாக 1000 ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்துள்ள மணிமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணிமாறன். 35 வயதே நிரம்பிய மணிமாறன் சாதாரணை ஆளில்லை. ஏராளமாக ஆதரவற்றோர் சடலங்களை மணிமாறன் நல்லடக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ஆதரவற்றோர் சடலங்களை பெற்று அவற்றை நல்லடக்கம் செய்வதுதான் மணிமாறனின் பணி . ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்ய போலீசாரும் இவரைத்தான் தேடுவார்கள். இவரின், சேவையை பாராட்டி தமிழக அரசு இரு முறை மணிமாறனுக்கு விருது அளித்து கௌரவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடத்தில் இருந்து அவர் விருது பெற்றுள்ளார். அதே போல, மத்திய அரசும் மணிமாறனுக்கு விருதளித்து கௌரவித்துள்ளது.

மணிமாறனை தொடர்பு கொண்டு, சடலங்களை  அடக்கம் செய்யும் முறை குறித்து கேட்ட போது, அவர் கூறியதாவது, '' நான் இமயமலையில் தீட்சிதை பெற்றவன். அதனால், சடலங்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. அதை பிரசாதம் என்றே நாங்கள் சொல்கிறோம். இந்த உலகில் எந்த உயிரும் ஆதவற்றவர்களாக இல்லை. எங்காவது ஒரு உறவு அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

ஆனால், ஏதோ ஒரு காரணங்களுக்காக ஆதரவற்றவர்களாக அவர்கள் மாறி விடுகிறார்கள் . எந்த ஒரு பிரசாதத்தையும் நல்லபடியாக அடக்கம் செய்ய வேண்டும். இரண்டு, மாதங்கள் மூன்று மாதங்கள் நாள்பட்ட பிரசாதங்களையும் கூட நாங்கள் அடக்கம் செய்து வருகிறோம். பிரசாதத்தை புதைக்கும் முன் 2 மூட்டை உப்பு வாங்குவோம்.

முதலில் ஒரு மூட்டை உப்பை கொட்டி அதன் மீது சடலத்தை வைப்போம். பிறகு ஒரு மூட்டை உப்பு போட்டு, மஞ்சள் பொடிகள் தூவி அடக்கம் செய்து மேலே மலர்மாலைகளை வைத்து முறைப்படி அடக்கம் செய்கிறோம். பிறகு, தீபம் ஏற்றி வைத்து விட்டுதான் அங்கிருந்து நகருவோம்.

பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. எந்த ஒரு உடலையும் அப்படி தூக்கி வீசி விட்டு போனால், அந்த ஆன்மா என்ன பாடுபடும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும் . தன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறதா என்பதை ஆன்மா மயானத்துக்கு வந்து பார்க்கும் . நல்லபடியாக அடக்கம் செய்தால், சாந்தமாக அங்கிருந்து நகர்ந்து விடும்.

அதனால், கொரோனாவால் இறப்பவர்களை நல்லடக்கம் செய்வதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். நாள்பட்டு போன சடலங்களை தகுந்த பாதுகாப்புடன் அடக்கம் செய்த அனுபவம் எங்கள் குழுவுக்கு இருக்கிறது. தமிழகம் முழுவதுமே எங்களுக்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை எங்களிடத்தில் கொடுத்தால், தகுந்த பாதுகாப்புடன் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய தயாராக இருக்கிறோம் '' என்றார்.

மணிமாறன் போன்றவர்களை அரசு பயன்படுத்திக் கொண்டால் என்ன?

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments