பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை என தகவல்

0 7246

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் இறுதியில் நடைபெறுவதாக இருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் வரும் 15ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, ஹால்டிக்கெட் விநியோகம், சிறப்பு பேருந்துகள், தேர்வறைகளை தயார்படுத்துதல் என அதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோரும், தள்ளி வைக்க வேண்டும் என ராமதாஸ் உள்ளிட்டோரும்  வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே பொதுத் தேர்வை ஒத்திவைக்க ஒருபுறம் ஆலோசனைகள் நடைபெற்று வந்தாலும் தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளி ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பினர்.

வரும் 15 ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் வசதிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், அடையாள அட்டையை காட்டி ஆசிரியர்கள் டிக்கெட் வாங்கியும், மாணவ, மாணவியர் இலவசமாகவும் பயணம் செய்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments