இந்தியாவில் மேலும் 9,887 பேருக்கு கொரோனா.. 24 மணி நேரத்தில் 294 பேர் பலி..!

0 1294

நாடு முழுவதும் மேலும் 9 ஆயிரத்து 887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 294 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 657ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 642ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 15 ஆயிரத்து 942 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 73 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்டமாக மகாராஷ்டிராவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் அத்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 229ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 849ஆகவும் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 694ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லியில் 26 ஆயிரத்து 334ஆகவும், குஜராத்தில் 19 ஆயிரத்து 94ஆகவும், ராஜஸ்தானில் 10 ஆயிரத்து 84ஆகவும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், இத்தாலியில் 2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இதுவரை 6ம் இடத்தில் இருந்த இத்தாலி, 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 7ம் இடத்தில் இருந்த இந்தியா, இத்தாலியை பின்தள்ளி 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments