காருக்கு ஆசைபட்டு 18 வயது பையனுக்கு 25 வயது பெண்ணுடன் திருமணம்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

0 291375

வேலூர் அருகே, 18 வயதுடைய இளைஞரை, விவாகரத்தான 25 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க நடந்த முயற்சி சமூக நலத்துறை அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது. சொத்துக்கு ஆசைப்பட்ட தந்தையின் பேராசைக்கு எண்டுகார்டு போட்ட தாயாரின் அதிரடி நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....

வேலூர் அரியூரை சேர்ந்த 25வயது பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பாடு கருத்துவேறுபாடு காரணமாக அவருடன் சண்டையிட்டு பிரிந்து தாய்வீட்டுக்கு வந்துவிட்டார். விவாகரத்தான நிலையில் அவர் தனியாக இருந்துள்ளார்.

பெரிய செல்வந்தரான அந்த பெண்ணின் தந்தை தனது மகளுக்கு நல்ல அழகான மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் வைப்பதாக முதல் கணவன் வீட்டாரிடம் சவால் விட்டுள்ளார். அதன் படி தனது மகளை 2 வது தாரமாக திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு ஒரு கார், மோட்டார் சைக்கிள், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழங்கப்படும் என தனது நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது நண்பர் ஒருவர் , காருக்கும் சொத்துக்களுக்கும் ஆசைப்பட்டு , கல்லூரியில் படித்து வரும் தனது 18 வயது மகனை, அந்த 25 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்துள்ளார். இந்த திருமணத்திற்கு அந்த இளைஞரின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதையும் மீறி நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தி முடித்த கையோடு, வருகிற 12 ந்தேதி திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர். அந்த திருமணத்திற்காக கார் வங்கும் பணிகள் முடிவடைந்ததால் அதிர்ந்து போன இளைஞரின் தாய் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் உடன் அந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும் 18 வயதுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் மணப்பெண், மற்றும் மணமகனின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தனர். இதையடுத்து அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. 25 வயது பெண்ணுக்கு 2 வது கணவராக இருந்த 18 வயது இளைஞரும் தப்பித்தார்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை படிக்கின்ற வயதில் நகை பணத்துக்கு ஆசைப்பட்டு திருமண வாழ்க்கையில் தள்ளினால் குடும்ப பாரம், அவர்களை கடுமையான மன அழுத்தத்திற்குள் தள்ளிடும் என்று எச்சரிக்கும் மனோதத்துவ நிபுணர்கள் அரசு வரையறுத்துள்ள வயது வரையறை என்பது அவர்கள் மனம் மட்டுமல்ல உடல் நலன் சார்ந்தது என்பதை உணர்ந்து பெற்றோர் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சிறுவர் திருமணம் தவறு என்பதை பெற்றோர் உணர்ந்தால் மட்டுமே இது போன்ற விபரீத திருமண ஏற்பாடுகள் நடத்தப்படாது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments