கை மற்றும் கழுத்தை.. அறுத்துக் கொண்ட தாய் – தந்தை..! விரட்டிய மகனால் விபரீதம்

0 7002

மதுரை மேலூர் அருகே கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றும் மகன் வீட்டை விட்டு துரத்தியதால் விரக்தி அடைந்த தாயும், தந்தையும் சுடுகாட்டுக்கு சென்று கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டனர். தந்தை உயிரிழந்த நிலையில் தாய் உயிருக்கு போராடி வரும் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சொக்கலிங்கபுரம் சுடுகாட்டுக்கு அருகில் சாலையோரம் வயதான தம்பதியினர் இருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதாக கொட்டாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

108 ஆம்புலன்சுடன் விரைந்து சென்ற காவல்த்துறையினர் உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த அவரது கணவரின் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்தவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த 63 வயது முதியவர் பாண்டியராஜன் என்பதும் உயிருக்கு போராடிய அந்த மூதாட்டி பாண்டியராஜனின் மனைவி கமலம் என்பதும் தெரியவந்தது. இவர்களது மகன் சதீஷ்குமார், பாலிடெக்னிக் ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு தேர்வில் சிங்கம்புணரி அரசுபள்ளியின் முதல் மாணவனாக 480 மதிப்பெண் பெற்ற சதீஷ்குமார் படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்ததால், நல்ல வேலை கிடைத்ததும், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தாய்-தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

பாண்டியராஜன், தனது மகளை கும்பகோணத்தில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத மருமகன், மகளிடம் சீர்கேட்டு அடித்து உதைத்து துன்புறுத்துவதாக தகவல் அறிந்து வேதனை அடைந்துள்ளார்.

மேலும் தனது மகளுக்கு சீர் பொருட்கள் கொடுக்கச் சொல்லி பாண்டியராஜன், பலமுறை வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த மகன் சதீஷ்குமார், தனது மனைவியின் பேச்சை கேட்டு ஆவேசமாக பேசி தாய் தந்தை இருவரையும் வீட்டை விட்டு வெளியே போக சொன்னதாக கூறப்படுகின்றது. இதனால் மனம் உடைந்த பாண்டியராஜன், வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்தார் .

எந்த சைக்கிளை கால் வலிக்க மிதித்துச்சென்று உழைத்து, தன்மகனை படிக்க வைத்தாரோ.... அதே பழைய சைக்கிளில் தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் பாண்டியராஜன்..!

வீட்டை விட்டு வெளியேறிய வயதான தம்பதி, மருமகனால் துன்புறுத்தப்படும் மகள் வீட்டிற்கு செல்ல வழியில்லாமலும், மருமகளின் கட்டுப்பாட்டில் உள்ள தன் மகனை திரும்பிச்சென்று பார்க்க விரும்பாமலும், யாருக்கும் பாரமின்றி சுடுகாட்டிலேயே உயிரை மாய்த்துக் கொள்வதென்று விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

முதியவர் பாண்டியராஜன் பலியான நிலையில் கமலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய தம்பதி, தாங்கள் சேர்த்து வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும், அணிந்திருந்த நகைகளையும் பக்கத்து வீட்டு பெண்ணிடம் கழற்றி கொடுத்துவிட்டு வீட்டில் இருந்து எதையும் எடுத்து செல்லவில்லை என மகனிடம் கூறும்படி சொல்லி சென்றுள்ளனர்.

பெற்றெடுத்த தாய் தந்தையரை கடைசிவரை கனிவுடன் கவனித்துக் கொள்ளும் பொறுமையை கற்றுத் தராத கல்வியால் முதல் மாணவராக திகழ்ந்தும் என்ன பயன் ? என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், இன்றைய மருமகள்கள் தான், நாளைய மாமியார்கள் என்பதை உணர்ந்தால் போதும், பெற்ற தாய் தந்தைக்கு எதிராக கணவனைத் தூண்டும் எண்ணம் ஒருபோதும் வராது என்கின்றனர்.

அதே நேரத்தில் வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகள் மன அழுத்தத்தில் பேசும் கடும் சொற்களை பெரிதாக்காமல், சிறு வயதில் பேசிய மழலை சொல் போலவே எண்ணி பெற்றோர் பொறுமை காத்தால் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் தவிர்க்கப்படும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments