பட்டாபிராமில் ரூ.235 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா.. முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்...

0 790

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பல்வேறு மாவட்டங்களில் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் திறந்து வைத்தார். 

நாமக்கல் மாவட்டம், ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடிவட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கும் காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

சென்னையின் வடக்குப் பகுதியில் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இத்திட்டம் அமையும். சுமார் 25,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 5 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments