எல்லையில் ஆயுதங்களைக் குவிக்கும் இந்திய -சீன ராணுவத்தினர்

0 11098

2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட டோக்லம் மோதலை தொடர்ந்து, உயரமான இடங்களில் பயன்படுத்தத் தக்க ஆயுதத் தளவாடங்களை சீனா விரைந்து விரிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது நிலவும் மோதல் போக்கால், லடாக் எல்லையில் இந்தியா, சீனா இரு நாடுகளும் கனரக ஆயுதங்களை களமிறக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா-சீனா-திபெத் எல்லையில் டோக்லம் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல் போக்கு, 73 நாட்களுக்கு நீடித்தது. அப்போதிருந்தே, எல்லையில் உயரமான பகுதிகளில் கைகொடுக்கும் ஆயுதத் தளவாடங்களை சீன ராணுவம் விரிவுபடுத்தியதாக சீன அரசின் செய்தி இதழான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரமான இடங்களில் பயன்படுத்த ஏற்ற, நவீன இலகுரக Type 15 டேங்குகள், Z-20 ஹெலிகாப்டர்கள், GJ-2 ட்ரோன்கள் ஆகியவற்றை சீன ராணுவம் விரிவுபடுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயரமான பகுதிகளில் பயன்படுத்துவதற்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆயுதங்கள், சீன ராணுவத்தின் வலிமையை ஓங்கச் செய்யும் என்ற ராணுவ வல்லுநர்களின் கருத்தையும் குளோபல் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

டோக்லம் பிரச்சனைக்குப் பிறகு, தற்போது லடாக் எல்லையில் இந்தியா-சீனா படைகள் இடையே ஏற்பட்டுள்ளது, மிக மோசமான மோதல் போக்கு என வர்ணித்துள்ள சீன அரசின் செய்தி இதழ், உயரமான பகுதிகளில் இந்திய படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தத் தக்க ஆயுதங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், இந்தியா, சீனா இரு தரப்புமே லடாக் எல்லையில் தற்போது மோதல் நிலவும் பகுதிக்கு அருகே பீரங்கிகள், கவச வண்டிகள் என கனரக ஆயுதங்களை களமிறக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் அருகே, எல்ஏசி எனப்படும் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், 4 இடங்களில் இந்தியா-சீன படைவீர்ரகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. Pangong Tso ஏரி அருகேயும், கல்வான் பள்ளத்தாக்கு அருகே 3 இடங்களிலும், சீனப் படைகளின் அத்துமீறலால் இந்த மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

ராணுவ மற்றும் தூதரக அளவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இருதரப்பும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளபோதிலும், சம்மந்தப்பட்ட பகுதியில் ஆயுத வலிமையை பெருக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

சீனாவின் நகர்வுக்கு ஏற்ப கூடுதல் படைகள், கனரக ஆயுதங்களை நகர்த்தும் இந்திய தரப்பு, Pangong Tso ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பழைய நிலை திரும்பும் வரை ஓயப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. சர்சைக்குரிய பகுதியில், இந்திய விமானப் படையும் வான்வழிக் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா-சீனா இடையேயான மோதலில், அமெரிக்கா பக்கம் சேர வேண்டாம் என இந்தியாவுக்கு அறிவுறுத்தும் பாணியில் சீனா கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையேயான பனிப்போருக்கு நடுவே இந்தியா சிக்கி பொருளதார பாதிப்புகளை எதிர்கொண்டுவிடக் கூடாது என சீன அரசின் செய்தி இதழான குளோபல் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments