அரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..! லாரி உரிமையாளர் ஆவேசம்

0 7626
அரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில் புகார்..! லாரி உரிமையாளர் ஆவேசம்

பல்வேறு வகையான கடன்களுக்கும் வங்கிகள் மேலும் 3 மாதங்கள் ஈ.எம்.ஐ வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்ட நிலையில் பெரும்பாலான வங்கிகள் அதனை மதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இந்த வகையில், சென்னை அம்பத்தூரில் தவணை தேதிக்கு முன்னரே வங்கிகணக்கில் இருந்து பணத்தை எடுத்த ஐசிஐசிஐ வங்கிக்கு எதிராக லாரி உரிமையாளர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கொரோனா சமூக பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் அனைத்து வங்கிகள் மற்றும் நுண் கடன் நிறுவனங்கள் கடன் தாரர்களிடம் இ.எம்.ஐ என்று அழைக்கப்படும் கடன் தவணை தொகையை வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது.

அதனை தொடர்ந்து வங்கிகள் தள்ளிவைத்து வசூலிக்கப்படும் தவணை தொகைக்கு வட்டிவசூலிக்கப்படும் என்று கூறியதால் சிலர் தவணை தொகைகளை செலுத்தினாலும், ஏராளமானோர் தவணை தொகையை தள்ளிவைக்க கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனு அளிக்கத் தவறியவர்களின் வங்கி கணக்கில் இருந்து, வழக்கம் போல ஒரு சில வங்கிகள் பணம் எடுத்ததாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருவதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதாவது ஜூன் முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை இ.எம்.ஐ வசூலிப்பதை தள்ளிவைக்க ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் உத்தரவிட்டார். ஆனால் பெரும்பாலான வங்கிகள் அவரது அறிவிப்பை மதித்ததாக தெரியவில்லை என்று கூறப்படுகின்றது. வாடிக்கையாளர் வங்கி கணக்கை நோட்டமிடும் வங்கிகள், அதில் பணம் இருந்தால் கடனுக்குரிய தவணை தொகையை உடனடியாக எடுத்துக் கொள்வதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை அம்பத்தூர் ஐசிஐசிஐ வங்கியில் லாரி வாங்குவதற்காக கடன் பெற்றிருந்த யுவராஜ் என்பவருக்கு மாதந்தோறும் 22ஆம் தேதி கடனுக்கான தவணை தொகையான 65 ஆயிரத்து 542 ரூபாய் பிடிக்கப்படுவது வழக்கம். அவர் தனக்கு தவணை தொகை பிடிப்பதை தள்ளிவைக்க கோரி வங்கியில் மனு அளித்திருந்தார்.

2 மாதங்கள் தவணை தொகை பிடிக்காமல் இருந்த நிலையில் மே மாதத்திற்கு உரிய தவணைத் தொகையை முன் கூட்டி 5ஆம் தேதியே அவரது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதால் யுவராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்தபோது பணத்தை திருப்பி கணக்கில் செலுத்தி விடுவதாக சமாதானம் கூறியுள்ளனர். ஆனால் இழுத்தடித்த நிர்வாகம் பணத்தை கொடுக்க மறுத்த நிலையில் தனது வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் தன்னிச்சையாக கையாளுவதாகவும், ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி செயல்படும் ஐசிஐசிஐ வங்கியின் அம்பத்தூர் கிளை மேலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்...

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வங்கி மேலாளரிடம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளனர்.இந்த வங்கி மட்டுமல்ல பெரும்பாலான வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து முறையான அறிவிப்பு வரவில்லை என்று கூறி உத்தரவை மீறி வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதை வாடிக்கையாக செய்து வருகின்றது.

அதேநேரத்தில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் தவணை தொகைக்குரிய பணம் இல்லாவிட்டால், மட்டுமே தவணைத் தொகை பிடித்தம் செய்யப்படாது என்று வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments