ஓசி சிகெரெட் தராத ஆத்திரத்தில் கடைக்கு தீவைப்பு..! மதுரைக்கு வந்த சோதனை

0 13052
ஓசி சிகெரெட் தராத ஆத்திரத்தில் கடைக்கு தீவைப்பு..! மதுரைக்கு வந்த சோதனை

ஓசியில் சிகரெட் கொடுக்க மறுத்த டீ கடைக்கு இரவோடு இரவாக தீ வைத்த மதுரை இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கடைக்கு தீவைத்துவிட்டு அணைப்பது போல நாடகமாடியவர் சிசிடிவி காட்சியால் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

மதுரை நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர் பூமிநாதன். செவ்வாய் கிழமை கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு அவரது டீக்கடையில் தீ கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து நெருப்பினை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள்ளாக கடை முழுவதும் பரவி எரிய தொடங்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினருடன் தீயணைப்புத் துறையினரும் இணைந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதற்குள்ளாக கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரித்த நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர், அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த குணசேகரன் என்பவர் டீகடைக்கு தீவைத்ததை கண்டுபிடித்தனர்.

அவரை பிடித்து விசாரித்தபோது கொரோனா ஊரடங்கு சமயத்தில் பூமிநாதனின் டீக்கடையில், இலவசமாக சிகரெட் கேட்டதாகவும் அதற்கு பூமிநாதன் தர மறுத்து விரட்டியதால் கடையை எரித்து விடுவேன் என அவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற கடைக்கு தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளான்..

தான் தீவைத்து விட்டு சென்ற சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க வந்ததால் அங்கிருந்த தன் மீது சந்தேகம் வந்து விடகூடாது என தானும் தீயை அணைப்பது போல நாடகமாடியதாக மதுரை இளைஞர் குணசேகரன் தெரிவித்துள்ளார்

இதற்கு முன்பு தீவைப்பில் ஈடுபட்டதாக குணசேகரன் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், தான் கேட்டு பொருட்கள் கொடுக்கவில்லையென்றால் அந்த கடைக்கு தீவைப்பதை இந்த "பயர்" குணசேகரன் வாடிக்கையாக செய்து வந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் இல்லை, இருந்தாலும் பொருள் இழப்பு, சம்பந்தப்பட்ட கடைக்காரரை கஷ்டத்தில் தள்ளியுள்ளது. இது போன்ற விபரீத நபர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஏனெனில் இது போன்ற ஆவேச நபர்கள் பற்ற வைக்கும் தீ மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது கடந்த கால வரலாறு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments