இளம்பெண்ணை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ய முயற்சி

0 3798
இளம்பெண்ணை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ய முயற்சி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்து, பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதால், தனது உறவினர்களுடன் மணப்பெண்ணை அவர் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த மல்லி காலனி பகுதியைச் சேர்ந்த யவனம் என்ற பெண் அங்குள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வருகிறார். இவருடைய உறவினரான கோவையைச் சேர்ந்த பவித்திரன் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் யவனத்தை நிச்சயம் செய்துள்ளனர்.பவித்திரனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமான தகவல் சில நாட்களில் தெரியவந்ததையடுத்து மணப்பெண் யவனம் வீட்டில் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பவித்திரன் தரப்பு, ஏற்கனவே நிச்சயம் செய்தபடி பெண்ணைக் கொடுக்குமாறு மிரட்டி வந்துள்ளனர். யவனம் வீட்டில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், செவ்வாய்கிழமை பவித்திரன் தனது உறவினர்கள் 5 பேருடன் மல்லி கிராமத்துக்கு சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த தாய், சகோதரி உள்ளிட்டோரை தாக்கிவிட்டு, மணப்பெண் யவனத்தை மட்டும் இழுத்து வந்து இருசக்கர வாகனத்தின் நடுவில் அமரவைத்து கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த யவனத்தின் இடது கால் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அப்போதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அந்த இரக்கமற்ற கும்பல் கார் ஒன்றை வரவழைத்து, அதில் யவனத்தை ஏற்றி, மலையடிப்பட்டி அழைத்து வந்து உறவினர் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

இதற்குள் யவனத்தின் தந்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் பகுதி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்களின் செல்போன் எண்ணை டிராக் செய்த போலீசார், அது மலையடிப்பட்டி பகுதியில் இருப்பதை கண்டறிந்தனர். அங்குள்ள போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, யவனம் போலீசாரால் அதிரடியாக மீட்கப்பட்டார்.

காயங்களுடன் இருந்த யவனத்தை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பவித்திரன் ,வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேர் கும்பலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெண்களுக்கு வரன் தேடும் பெற்றோர், மாப்பிள்ளை குறித்து விரிவாக விசாரித்து, திருமணம் நிச்சயம் செய்யத் தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி உள்ளது இந்த கடத்தல் சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments