மாநகர் மதுரையில் உருவாகியுள்ள "சிலப்பதிகாரப் பூங்கா"

0 2938

மதுரையில் சிலப்பதிகாரப் பூங்காவை ஏற்படுத்தியதோடு, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட மரங்களை அங்கு வளர்த்து அழகூட்டியிருக்கிறார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்.

பண்டைய இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய குறிப்புகள் ஏராளம். அதில், சிலப்பதிகார காலத்து மதுரையை சொற்களால் சித்திரமாகத் தீட்டி தந்தவர் இளங்கோவடிகள். அத்தகைய காவியத்தையும், அந்த காப்பியம் வழங்கும் நீதியையும் சிறப்பிக்கும் வகையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சுமார் 2 ஏக்கரில் சிலப்பதிகாரப் பூங்கா உருவாகியிருக்கிறது.

கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்து, கண்ணகி தனது கால் சிலம்பை ஏந்திப் புறப்பட்ட இடமான ‘கடைச்சிலம்பு ஏந்தல்' என்ற ஊர்தான், தற்போது மதுரையில் கடச்சனேந்தல் என்று மருவியுள்ளது. அங்கிருந்து கண்ணகி மதுரைக்கு நடந்து சென்ற பாதையில் சிலம்பதிகாரப் பூங்கா அமைந்துள்ளது. கடம்பு, வாகை, வேங்கை, புங்கை, மருது என அன்றைய மதுரையில் என்னென்ன மரங்கள் இருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறதோ அதையெல்லாம் தேடிப்பிடித்து பூங்காவில் வளர்த்திருப்பதாகக் கூறுகிறார், எஸ்.பி.மணிவண்ணன். 

பூங்கா நுழைவு வாயிலில் சிலப்பதிகார கதைச் சுருக்கமும், பூங்காவுக்குள் ஆங்காங்கே மங்கள வாழ்த்துப் பாடலில் ஆரம்பித்து வரந்தரும் காதை வரையிலான 30 காதைகளின் சுருக்கமும் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது. நடுவில் பிரம்மாண்டமான கால் சிலம்பு சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. பின்னணியில் கண்ணகி, கோவலன், மாதவி, சேரன் செங்குட்டுவன், கவுந்தியடிகள், இளங்கோவடிகள் ஆகியோரின் ஓவியங்களும் வரையப்பட உள்ளதாக தெரிவிக்கிறார், மணிவண்ணன்.

கொரோனா காரணமாக, பூங்கா திறப்பு விழா மிக எளிமையாக விரைவில் நடைபெறும் என்று கூறும் எஸ்.பி. மணிவண்ணன், பெரும் முயற்சி எடுத்து உருவாக்கியிருந்தாலும், காப்பிய பூங்காவில் எந்த இடத்திலும் தன்னுடைய பெயரை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments