நம்பிக்கை அளிக்கும் யோகா, இயற்கை மருத்துவம்.!

0 3577

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கொரோனா வைரசின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என சித்த மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதற்காக அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் குறித்தும் யோகப் பயிற்சிகள் குறித்தும் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து மற்றும் குணமாக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள நடைமுறையில் தொற்று பாதித்தவர்களை குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுப் பொருட்களைக் கொடுத்து, அதன் மூலம் வைரஸ் பாதிப்பிலிருந்து குணப்படுத்தி வருகின்றனர் மருத்துவர்கள். இடையில் காய்ச்சல் இருப்பின் அதற்கான பாராசிட்டமால் மாத்திரைகள் கொடுப்பதும் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில்தான்  யோகா மற்றும் இயற்கை மருந்துகள் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, வைரசின் பாதிப்பிலிருந்து மீளலாம் என மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.

துளசி, மிளகு, அதிமதுரம், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து பொடியாக்கி தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து பருகுமாறு கூறுகின்றனர் மருத்துவர்கள். இதில் மருந்துப் பொருட்களின் அளவும் அதனை பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவீடுகளும் மருத்துவர்களின் பரிந்துரைப்படியே இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. 

இது மட்டுமின்றி வஜ்ராசனம், பஸ்திரிகா பிராணயாமம், பிராமரி பிராணயாமம், விரைவான மற்றும் ஆழமான உடல் தளர்த்தும் பயிற்சி என சில பயிற்சிகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் பிணியாளர்களுக்கு இந்த மருந்துகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவை மட்டுமின்றி வழக்கமாக கூறப்படும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, கூட்ட நெரிசலை தவிர்ப்பது, கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசங்களை பயன்படுத்துவது, உள்ளிட்ட அடிப்படை தனிமனித சுகாதாரத்தை கடைபிடிக்கவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். 

முயற்சியும் முறையான பயிற்சியும் அதற்குத் தேவையான மருத்துவர்களின் ஆலோசனையும் போதிய அளவில் இருக்கையில் கொரோனாவை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் என்பதில் ஐயமில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments