குடும்பத்தை கைவிட்ட கோபம்.. பெற்ற தந்தையை கொன்ற மகன்கள்..!

0 8276

அரியலூர் அருகே மின்வாரிய ஊழியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது மகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சொத்துகளை 2ஆவது மனைவியின் பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்ததால் ஆத்திரத்தில் மகன்களே தந்தையை கொன்ற கொடூரம் அரங்கேறி இருக்கிறது. 

அரியலூர் பெரியதிருக்கோணத்தைச் சேர்ந்த கனகசபை கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 21ந்தேதி பணி மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற இருந்த கனகசபை, கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு கழுத்தறுபட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

போலீசார் விசாரணையில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நின்றுகொண்டிருந்த கனகசபையின் 2ஆவது மகன் கலைவாணனின் டி ஷர்ட்டில் ஒட்டியிருந்த ரத்தக்கறை அத்தனை உண்மைகளையும் வெளியே கொண்டுவந்தது.

அம்சவள்ளி என்ற மனைவி, கலைச்செல்வன், கலைவாணன் என்ற 2 மகன்களோடு வாழ்ந்து வந்த கனகசபை, 15 ஆண்டுகளுக்கு முன் அவர்களைப் பிரிந்து, சங்கீதா என்ற கைம்பெண்ணோடு குடும்பம் நடத்தி வந்துள்ளார். கனகசபை - சங்கீதா தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகள் பிறந்திருக்கிறது.

முதல் மனைவிக்கும், கனகசபைக்கும் இடையே விவாகரத்து வழக்கு அரியலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. சங்கீதாவின் பிள்ளைகளை படிக்கவைத்து, திருமணம் செய்து கொடுத்தோடு, தனது சொத்துகள் முழுவதையும் அவர்களுக்கு கனகசபை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த முதல் மனைவியின் மூத்த மகன் கலைச்செல்வனுக்கும், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கலைவாணனுக்கும் தந்தையின் செயல் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொலை சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கனகசபையை இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு, சொத்து பிரச்சினையை எழுப்பியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கனகசபையை கொலை செய்து விட்டு இருவரும் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதில் நியாயம் யார் பக்கம் இருப்பினும் வன்முறை, கொலை ஆகியவை எதற்குமே தீர்வாகாது என்பதை தெளிவாக உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments