படிப்படியாகத் தளரும் கட்டுப்பாடுகள்... இயல்பு நிலைக்கு திரும்பும் மாநிலங்கள்..

0 780
படிப்படியாகத் தளரும் கட்டுப்பாடுகள்... இயல்பு நிலைக்கு திரும்பும் மாநிலங்கள்..

ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பேருந்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. நான்காம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஆந்திரத்தில் 57 நாட்களுக்குப் பின் மீண்டும் உள் மாநிலப் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

பயணிகளுக்கு வெப்ப நிலை கண்டறியும் சோதனை செய்வதுடன், கிருமி நாசினி கொண்டு கைகளைத் தூய்மை செய்வதும், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிவிட்டே பயணிகள் அமர வைக்கப்படுகின்றனர். விஜயவாடா பேருந்து நிலையத்திலும் பயணிகள் போதிய இடைவெளிவிட்டே நிற்க அனுமதிக்கப்படுகின்றனர். 

டெல்லி ஓக்லா காய்கறிச் சந்தைக்கு வரும் அனைவருக்கும் வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. கொரோனா அறிகுறியுள்ளவர்களைச் சந்தைக்குள் அனுமதிக்கவில்லை.

காசிப்பூர் காய்கறிச் சந்தையில் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்காகக் கம்புகளால் தடுப்புகளை அமைத்து வரிசையாக உள்ளே சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சந்தைக்குப் பொருமக்களின் வரத்து அதிகரித்துள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்துக் காஷ்மீரின் ஜம்முவில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

டெல்லியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்களின் இயக்கம் அதிகரித்துள்ளதால் உத்தரப்பிரதேச எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் சமூக விலகலைக் கடைப்பிடித்து 50 விழுக்காடு இருக்கைகளில் ஆட்களை அமர வைத்துப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆட்டோக்கள், வாடகைக் கார்களும் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகள், அலுவலகங்கள் பாதியளவு பணியாளர்களைக் கொண்டு இயங்கலாம் என அறிவித்துள்ளதால் சாலையில் கார்கள், இருசக்கர வாகனங்களின் இயக்கம் அதிகரித்துள்ளது.

டெல்லியில் இருந்து  உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசிப்பூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அனுமதிச் சீட்டு உள்ளதா என்று சோதனை செய்யப்படுகின்றன. ஆட்களுக்கும் வெப்பநிலை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. இதனால் டெல்லி - நொய்டா, டெல்லி - காசிப்பூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நெடுந்தொலைவுக்கு வரிசையாக நிற்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments