ஊரடங்கு நேரத்திலும் கைவரிசை..சிக்கிய செல்போன் கொள்ளையன்

0 1874
ஊரடங்கு காலம் என்பதால் காவல்துறை கண்டுகொள்ளாது என்ற எண்ணத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் தனியே நடந்து செல்வோரிடமிருந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தவனை போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு காலம் என்பதால் காவல்துறை கண்டுகொள்ளாது என்ற எண்ணத்தில் சென்னையின் முக்கிய பகுதிகளில் தனியே நடந்து செல்வோரிடமிருந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தவனை போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 

சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம், குமரன் நகர், பாண்டி பஜார், வடபழனி, அபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக செல்போன் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன. இது தொடர்பான புகார்களும் வந்தவண்ணம் இருக்கவே, உஷாரான போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். 

காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களே சம்மந்தப்பட்ட நபரின் முக்கிய இலக்காக இருந்ததை கவனித்த போலீசார், கொள்ளை நடந்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் ஒரே நபர்தான் தலைக்கவசம் அணிந்தவாறு வந்து இந்த செல்போன் வழிப்பறியில் ஈடுபடுகிறான் என்பது உறுதியானது. இதனையடுத்து காலை நேரத்தில் சாதாராண உடையில் வலம் வந்த போலீசார், செல்போன் கொள்ளையனை கோட்டூர்புரத்தில் வைத்து அடையாளம் கண்டனர்.

இயல்பாகச் சென்று பிடிக்க முயன்றால் ஓடி விடுவான் என எண்ணி அதிரடியில் இறங்கிய போலீசார், சாலையோரமாக நின்றவாறு செல்போன் பறிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்த கொள்ளையன் மீது இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று மோதி அவனை நிலை குலையச் செய்து மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் பிடிபட்டவன் பெயர் குதிரை சிவா என்கிற வினோத் அலெக்சாண்டர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி, 9 மாதங்களாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்தவன் என்பதும் கொரோனா பிரச்சனையால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கைதிகளோடு கைதியாக வெளியே வந்தவன் என்பதும் தெரியவந்தது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் வெளியே வைக்கப்படும் காய்கறிகள், பால் பாக்கெட்டுகளை திருடி விற்று வந்துள்ளான் வினோத் அலெக்சாண்டர் என்கின்றனர் போலீசார். அவனிடமிருந்து 7 செல்போன்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் போலீசாரின் கவனம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும் தனிநபர் இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் மட்டுமே இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டு சாவகாசமாக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனுக்கு போலீசார் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments