இந்தியாவில் மேலும் 4,987 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 90,000ஐ தாண்டியது..!

0 1848
நாட்டில் கொரோனாவால் 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு

இந்தியா முழுவதும் நேற்று மேலும் 4 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் பலியானோரின் எண்ணிக்கை விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4 ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 120 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் இதுவே மிகவும் அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 927ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நாட்டில் கொரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 872ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 53 ஆயிரத்து 946 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், இதுவரை சிகிச்சையில் 34 ஆயிரத்து 109 பேர் குணமாகியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 706ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 135ஆகவும் அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 988ஆகவும், பலி எண்ணிக்கை 625ஆகவும் பதிவாகியுள்ளது. குஜராத்துக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 585ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74ஆகவும் அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. மேற்கு வங்கம், ஆந்திரம் மாநிலங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், பீகார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா,பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்களில் ஆயிரத்துக்கு அதிகமானோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அந்த மாநிலங்களில் கொரோனா பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments