அரசு மருத்துவர் இருவர் இடமாற்றம்.. காப்பீடு முறைகேடு..! அடித்துக் கொண்டதால் நடவடிக்கை

0 2828

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் மோதலில் ஈடுபட்ட இரு மருத்துவர்கள் திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆர்த்தோ மருத்துவர் சிவக்குமார் என்பவர் காப்பீட்டுதிட்ட நோயாளிகளை தனது கிளினிக்கிற்கு கடத்திச் சென்றதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா எந்த அளவுக்கு வேகமாக பரவுகிறதோ அதே அளவுக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவதும் அதிகரித்து வருகின்றது. நமது அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மகத்தான சேவையால் கொரோனா நோயாளிகள் விரைவில் குணம் பெற்று வருகின்றனர்.

அல்லும் பகலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல அரசு மருத்துவர்கள் மத்தியில் அரசு காப்பீட்டு பணத்திற்காக, தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை கடத்திய புகாரில் சிக்கி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கு ஆர்த்தோ மருத்துவராக பணிபுரிந்து வந்த சிவக்குமார் செந்தில் முருகன் என்பவர் சொந்தமாக ஆர்த்தோ கிளினிக் நடத்தி வரும் நிலையில் பெண்ணாகரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அறுவை சிகிச்சைக்காக தனது கிளினிக்கிற்கு தனியார் ஆம்புலன்சிலும், சில சமயம் 108 ஆம்புலன்சிலும் கடத்திச்சென்று விடுவார் என்று கூறப்படுகின்றது.

கிளினிக்கில் சிகிச்சை பெற்றது போல காப்பீடு பணத்தை பெற்றுக் கொண்டு, நோயாளியை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அட்மிஷன் போட்டு சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகின்றது. இதற்கு அங்குள்ள செவிலியர்கள் கம்பவுண்டர்கள் துணையாக இருந்துள்ளனர்.

சிவகுமாரின் முறைகேடு குறித்து இளம் மகப்பேறு மருத்துவர் கனிமொழி என்பவர், தருமபுரி தலைமை மருத்துவருக்கு புகார் அளித்துள்ளார். தலைமை மருத்துவர் மாவட்ட நலப்பணிகள் இயக்குனருக்கு, புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

ஆர்த்தோ மருத்துவர் சிவகுமார் செந்தில்முருகனின் முறைகேடு குறித்து விரிவான புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனால் சிவக்குமார் செந்தில் முருகனுக்கும், கனிமொழிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான புகார் நிலுவையில் இருந்த இந்த நிலையில் பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. இரவில் நோயாளி வந்திருக்கும் விவரத்தை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று இளம் மருத்துவர் கனிமொழி, செவிலியரை திட்டியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து ஆர்த்தோ மருத்துவர் சிவக்குமார் தூண்டுதலில் பேரில் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் கம்பவுண்டர்கள், கனிமொழி, செவிலியரை தாக்கியதாக கூறி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையின் போது செவிலியர் போராட்டத்தின் பின்னணியில் ஆர்த்தோ மருத்துவர் சிவக்குமாரின் தூண்டுதல் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் கனிமொழிக்கு செவிலியர்களால் வீணான பிரச்சனை உருவாகும் என்பதை சுட்டிக்காட்டி தருமபுரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை தலைமைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து காப்பீட்டு திட்டமுறைகேட்டில் ஈடுபட்ட ஆர்த்தோ டாக்டர் சிவக்குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதே போல இளம் மருத்துவர் கனிமொழி அரூர் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

நாடே கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பெண்ணாகரத்தில் நோயாளிகளின் நலனை மறந்த ஆர்த்தோ மருத்துவர் சிவக்குமார், தனது முறைகேட்டை காட்டிக் கொடுத்ததால், சக பெண் மருத்துவருக்கு எதிராக செவிலியர்களை தூண்டிவிட்டு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments