காதலனுடன் சேர்ந்து வளர்ப்புத் தாயை எரித்துக் கொன்ற மகள்..! 2k கிட்ஸ் விபரீத காதல்

0 14391

பெரம்பலூர் அருகே, வளர்ப்புத் தாயை எரித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி, காதலனுடன் லாட்ஜில் தங்கியிருந்த 16 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர். படிக்கின்ற வயதில் காதலில் விழுந்ததால் வாழ்க்கையை தொலைத்து சிறையில் கம்பி எண்ணும் சிறுமியின் பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னக்கோணம் ஊராட்சிக்குட்பட்ட கீழக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி பச்சையம்மாள். இவர்களது ஒரே மகன் பழனிவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்ததால், பெருமாள்-பச்சையம்மாள் தம்பதியினர் ஒரு வயதுப் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முதியவர் பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்றுவந்த 16 வயது வளர்ப்பு மகள் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் 6 மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதால் அந்த சிறுமி படிப்பை பாதியிலே கைவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சட்டவிரோத வில்லங்க காதல் திருமணத்தை மூதாட்டி பச்சையம்மாள் கடுமையாக கண்டித்துள்ளார். காதல் கணவனை பிரிந்து இருப்பது போல நடித்த அந்த சிறுமி, பச்சையம்மாள் கண்ணயர்ந்து தூங்கியதும், செல்போன் மூலம் காதலன் மணிகண்டனை வரவழைத்து மொட்டை மாடியில் சந்தித்து வந்துள்ளார்.

அண்மையில் ஒரு நாள் இருவரும் மாடியில் ஒன்றாக இருப்பதை பார்த்த பச்சையம்மாள், இருவரையும் பிடித்து கண்டித்ததோடு காதலன் மணிகண்டனை விரட்டியுள்ளார். இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் பச்சையம்மாள் சடலமாக கிடந்தார்.

கியாஸ் கசிந்து தீப்பிடித்து வளர்ப்புத்தாய் பலியானதாக ஊர் மக்களிடம் தெரிவித்த அச்சிறுமி, காதலனுடன் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. இதையடுத்து மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தலைமறைவான காதல் ஜோடியைத் தேடிவந்தனர்.

கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் காதலனுடன் தங்கி இருந்த சிறுமியையும் காதலனையும் பிடித்து விசாரித்த போது பச்சையம்மாள் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

சம்பவத்தன்று, மணிகண்டன் குடிபோதையில் காதலியை சந்திக்கச் சென்றுள்ளான். தன்னை வீட்டிற்குள் விட மறுத்து பச்சையம்மாள் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளான். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் அடிபட்டு மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார்

பின்னர், காதலியுடன் சேர்ந்து வீட்டுக்கு வெளியே இருந்த கடப்பாக் கல்லை தூக்கிவந்து பச்சையம்மாளின் தலையில் போட்டு நசுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனை தீவிபத்தாக மாற்ற எண்ணி, அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி, கியாஸ் அடுப்பை திறந்து தீப்பற்ற வைத்ததும் தெரியவந்தது.

விடிந்ததும், எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட விபத்தில் பச்சையம்மாள் இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் நாடகமாடி விட்டு, வில்லங்க காதல் ஜோடி தப்பிச்சென்றது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதனையடுத்து அவர்கள் மணிகண்டனையும், சிறுமியையும் கைது செய்த போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமண வயதை எட்டாத 16 வயது சிறுமி ஒருவர் படிக்கின்ற வயதில் காதலில் விழுந்ததால், படிப்பைத் தொலைத்ததோடு, வளர்ப்புத்தாயைக் கொன்றதாக வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணிவருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments