தமிழகத்தில் 34 வகையான கடைகள் இன்று திறப்பு..!

0 5612
டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், செல்போன் கடைகள் திறப்பு

தமிழகத்தில் 47 நாட்களுக்குப் பின் டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பழுதுநீக்கும் கடைகள், விற்பனையகங்கள் உள்ளிட்டவை இன்று திறக்கப்படுவதால் வியாபாரம் விரைவில் இயல்புநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 24ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து 34 வகையான தனிக்கடைகள் இன்று திறக்கப்படுகின்றன.

டீக்கடைகள், பேக்கரிகள், பூ, பழம், காய்கறி, பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனைக்கடைகள், சிமெண்டு, ஹார்டுவேர்ஸ், சானிடரிவேர் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன.

மின்சாதன பொருட்கள் விற்பனை, மொபைல் போன் விற்பனை - பழுது நீக்குதல், கணினி விற்பனை, வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் பொருட்கள் விற் பனை, மோட்டார் எந்திரங்கள் விற்பனை, கண் கண்ணாடி கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஏசி வசதி இல்லாத சிறிய ரக நகைக் கடைகள், ஊரக பகுதிகளில் சிறிய ரக ஜவுளி கடைகள், மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை - பழுது நீக்கும் கடைகள், பர்னிச்சர் கடைகள் ஆகியவை இன்று திறக்கப்படுகின்றன.

இதுதவிர, சாலை ஓர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவையகம், கூரியர் - பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் ஆபீஸ், ஜெராக்ஸ் கடைகள், இரு சக்கர , 4 சக்கர வாகன விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையங்கள், நாட்டு மருந்து கடைகள், விவசாய இடு பொருள் - பூச்சி மருந்து விற்பனை கடைகள், டைல்ஸ்,பெயின்ட், எலக்ட்ரிக் கல்ஸ் கடை கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை, நர்சரி கார்டன்கள், மரக் கடை - பிளைவுட் விற்பனை, மரம் அறுக்கும் மில்கள் ஆகியவையும் திறக்கப்படுகின்றன.

அதேநேரம், முடிதிருத்தகம், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைகளில் குளிர்சாதன வசதி இருந்தால், கடை உரிமையாளர்கள் அதை இயக்க கூடாது என்றும் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தனிநபர் இடைவெளியை கடை பிடித்தல், கிருமி நாசினி தெளிப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, கடை உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுஅறிவுறுத்தி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments