இழுத்து மூடப்பட்டது கோயம்பேடு சந்தை..!

0 2415

கொரோனா பாதிப்பால் சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிக மூடப்பட்டது. காய்கறி மொத்த விற்பனை திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வியாபாரிகள் சங்கத்தினர், வரும் 10ம் தேதி வரை காய்கறி வருவது நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
 
கோயம்பேடு சந்தையில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள், காய்கறி வாங்க வந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, சந்தை தற்காலிகமாக மூடப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. மேலும் வரும் 7ம் தேதி முதல் காய்கறி மொத்த விற்பனை திருமழிசை பகுதியில் நடைபெறும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் தடையை மீறி விற்பனையில் ஈடுபட்டனர். மேலும் இருசக்கரவாகனங்கள், ஆட்டோக்கள் சந்தைக்குள் வர விதிக்கப்பட்டுள்ள தடையையும் மீறி, அவற்றில் வந்து ஒரு சிலர் காய்கறி வாங்கி சென்றனர்.

இதையடுத்து அனைத்து வியாபாரிகள் மற்றும் வாகனங்களையும் வெளியேற்றிய மாநகராட்சி அதிகாரிகள், கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக இழுத்து மூடினர்.

முன்னதாக திருமழிசை பகுதிக்கு மொத்த விற்பனை மாற்றப்பட்டுள்ளது குறித்து, கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் தலைவர் ராஜசேகர், சந்தை இடமாற்றத்தால் மொத்த வியாபாரிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் திருமழிசை பகுதியில் அடிப்படை வசதிகள், போதிய பாதுகாப்பு வசதிகள், இடவசதி உள்ளிட்டவை குறித்து 8ம் தேதி ஆராய இருப்பதாக தெரிவித்த அவர், அதனால் வரும் 10ம் தேதி வரை வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சரக்கு வருவது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மொத்த விற்பனை கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேட்டில் இன்று புதிதாக 13 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்து. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வணிகர்கள் 6 பேருக்கு கொரோனா உள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. இதேபோல் சந்தைக்குத் தென்புறம் உள்ள சேமத்தம்மன் நகரில் 5 பேருக்கும், ஐயப்ப நகரில் 2 பேருக்கும் கொரோனா உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களைச் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 25 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய 450 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மட்டும் 25 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 160 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments