இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பலி எண்ணிக்கை 56-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் ஒருபக்கம் தீவிரபடுத்தப்பட்ட நிலையில், மறுபக்கம் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகரித்தபடியே உள்ளது.
நாட்டில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் குஜராத்தை சேர்ந்தவர். இன்னொருவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆவார்.
குஜராத் மாநிலம், கோத்ரா மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை எடுத்து வந்த 78 வயது நபர் நேற்றிரவு உயிரிழந்தார். இதேபோல் மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் 67 வயது ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இவர்களையும் சேர்த்து, நாட்டில் கொரோனா தொற்று நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
நாடு தழுவிய அளவில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்து அதிகபட்சமாக குஜராத்தில் 7 பேரும், மத்திய பிரதேசத்தில் 6 பேரும் பலியாகியுள்ளனர்.
இவர்களை தவிர்த்து, ஆந்திராவில் மேலும் 12 பேருக்கும், ராஜஸ்தானில் மேலும் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் கோவாவிலும் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கோவாவில் கொரோனா உறுதியான நபர், கென்யா, மொசாம்பிக் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தவராவார்.
இதுபோல புதிதாக 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதித்தோரில் 55 பேர் வெளிநாட்டினர் எனத் தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு 57 பேர் குணமடைந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனாவால் அதிகம் பேர் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளதாகவும், அந்த மாநிலத்தில் இதுவரை 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தகவல் அறிய: https://google.com/covid19-map/?hl=en
Comments