ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதற்கு பிரதமர் மோடி பாராட்டு

0 13378

கொரோனாவால் உருவாக்கப்பட்டுள்ள இருளில் இருந்து நாட்டு மக்கள் வெளிவர வேண்டும் என்றும், இதற்காக வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு 9 நிமிடங்களுக்கு விளக்கு, மெழுகுவர்த்தி,  செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் தனது செய்தியை வெளியிட்டார்.

அதில் பேசியுள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அமல்படுத்தியுள்ள 21 நாள் ஊரடங்கு காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒழுக்கமும், சேவை உணர்வும் வெளிப்படுத்தப்படுவதாக பாராட்டினார்.

ஊரடங்கை வெற்றியடைய செய்ய நாட்டு மக்களும், அரசு நிர்வாகமும் இந்த ஒழுக்கத்தையும், சேவை உணர்வையும் அன்றாடம் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருப்போருக்கு கடந்த மாதம் 22ம் தேதியன்று இந்திய மக்கள் நன்றி தெரிவித்த விதம், உலகுக்கே முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் புகழ்ந்தார்.

மக்களில் பலர், கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் தனி நபரால் என்ன செய்ய முடியும்? இந்த யுத்தத்தில் எப்படி தங்களால் ஈடுபட முடியும்?, இன்னும் எத்தனை நாள்கள் ஊரடங்கில் அடைந்து இருக்க முடியும்? என நினைப்பதாக குறிப்பிட்ட பிரதமர், மக்கள் வீட்டில் அடைந்திருந்தாலும், தாங்கள் தனித்திருக்க வில்லை என்பதையும், தங்களுடன் நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் சக்தியும் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கொரோனாவால் உருவாக்கப்பட்டுள்ள இருளில் இருந்து நாட்டு மக்கள் வெளிவர வேண்டும் என்று கூறிய பிரதமர், இதற்காக வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து விட்டு, 9 நிமிடங்களுக்கு விளக்கு, மெழுகுவர்த்தி அல்லது செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிர செய்து, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் தங்களின் பங்களிப்பும் உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

130 கோடி இந்தியர்களும் விளக்குகளை ஒளிர செய்கையில், வெளிச்சத்தின் சக்தியை பார்க்கலாம் எனவும், அதுதான் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மக்களை முன்னின்று வழிநடத்தும் எனவும் பிரதமர் கூறினார்.

வீடுகளில் 5ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்கு, மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச் லைட்டுகளை ஒளிர செய்கையில், சமுக விலகலை மக்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஒரே இடத்தில் திரண்டு அதை மேற்கொள்ளக் கூடாது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments