தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி

0 23153

சேலம் வந்த 5 பேருக்குக் கொரோனா வைரஸ் இருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்துத் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து சேலத்துக்கு வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் 11 பேர், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதில் இந்தோனேசியர்கள் 4 பேர், சென்னையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் என 5 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்துத் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 லட்சத்து ஒன்பதாயிரத்து 276 பேருக்குக் காய்ச்சல் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும், 15ஆயிரத்து 492 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

890 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டதில் 23 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதும், 757 பேருக்குக் கொரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேஷியாவில் இருந்து தமிழகத்திற்கு மதப்பிரச்சாரத்திற்கு வந்து கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்கள் தங்கியிருந்த 5  மசூதிகளையும், சுற்றுப்புற பகுதிகளையும்,  மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்துள்ளனர்.

கடந்த 11ஆம் தேதி சென்னையை சேர்ந்த ஒரு சுற்றுலா வழிகாட்டியுடன் சேலம் வந்த மதபோதகர்கள், சூரமங்கலம் ரஹமத்நகர் மசூதி, செவ்வாய்ப்பேட்டை பாரமார்கட் மசூதி, அம்மாபேட்டை ஷேக்உமர் மசூதி, சன்னியாசிகுண்டு புகாரியா மசூதி மற்றும் கிச்சிபாளையம் ஜனாத்தூல் பிர்தௌஸ் மசூதி ஆகிய 5 மசூதிகளுக்கு சென்று, 22 ம் தேதி வரை, மத போதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக இந்தோனேஷியாவை சேர்ந்த 11 பேருடன் சென்னை சுற்றுலா வழிகாட்டி, உள்ளூரைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 16 பேர், சேலம் அரசு மோகன்குமாரமங் கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில், தனிமை வார்டில், தங்க வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இவர்களில், இந்தோனேஷியர் கள் 4 பேருக்கும் சென்னை சுற்றுலா வழிகாட்டிக்கும் கொரோனா உறுதி ஆகி உள்ளதால், இவர்கள், வலம் வந்த 5 மசூதிகளிலும் யார், யாரையெல்லாம் சந்தித்தார்கள் என்ற பட்டியலை தயார் செய்து, மருத்துவ பரிசோதனை நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments