ஊரடங்கில் வாகனங்களில் உலா.. விரட்டி விரட்டி வெளுத்த போலீஸ்..!

0 28422

மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஊரடங்கை மீறி வாகனங்களில் உலா வந்தோரை லத்தியால் நன்கு கவனித்து போலீஸார் அனுப்பி வைத்தனர்.

கொரோனா எனும் கண்ணுக்கு தெரியாத அரக்கனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கூச் பெகார், வடக்கு 24 பர்கானா உள்ளிட்ட பகுதிகளில் சிலர் இதை கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, சைக்கிள் ஆகியவற்றில் நகர்வலம் வந்தனர்.

கொரோனா பரவாமல் தடுக்க வேண்டியது தமது சமூககடமை என்பதை மறந்து அவர்கள் நடமாடியதை கண்டு ஆத்திரமடைந்த போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதேபோல் சைக்கிள் ரிக்சாக்களில் வந்தோரை எச்சரிக்க, டயர்களில் காற்றை திறந்துவிட்டு அனுப்பினர். 

தெலுங்கானா மாநிலம், கம்பம் நகரில் ஊரடங்கை மீறி சேர் ஆட்டோ ஓட்டி வந்த டிரைவரை கண்ட போலீஸார், அவரை கீழறக்கி விட்டு, லத்தியால் விளாசினர். அடி தாளாத டிரைவர், போலீஸார் அடிப்பதை நிறுத்தியதும், விட்டால் போதும் என ஆட்டோவில் ஏறி தப்பினார். 

ஹைதராபாத்தில் ஸ்கூட்டர்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் உலா வந்தோரை போலீஸார் மடக்கி பிடித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிள்களில் இருந்தோர் தெரிவித்த சாக்கு போக்குகளை கண்டுகொள்ளாமல், ஒருவர் பின் ஒருவராக நன்றாக கவனித்தனர். 

ஆந்திரா மாநிலம் சித்தூரில் சாலைகளில் சுதந்திரமாக சுற்றிதிரிந்த 7 பேரை போலீஸார் மடக்கி பிடித்தனர். பின்னர் நடுரோட்டில் நிற்க வைத்து முட்டி தேய தேய தோப்பு கரணம் போட வைத்தனர். 

திருப்பதியிலும் போலீஸாரின் லத்தி கவனிப்புக்கு விதியை மீறிய வாகன ஓட்டிகள் தப்பவில்லை. மோட்டார் சைக்கிள்களில் பெண்கள், குழந்தைகளுடன் வந்தோரை மட்டும் எச்சரித்த போலீஸ், தனியாக வாகனங்களில் வந்தோரை தக்கபடி கவனித்தனர். 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஹெல்மெட் போட்டு கொண்டும், முகத்தை துணியால் மறைத்தபடியும் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இளம்பெண், பெண் உள்ளிட்டோரை மடக்கி போலீஸார் தோப்புகரணம் போட வைத்தனர். தங்களது செயல்களுக்கு மன்னிப்பு கேட்ட பிறகு அவர்களை எச்சரித்து போலீஸார் திருப்பி அனுப்பினர்.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பல மாநிலங்களில் 144 உத்தரவு தடை அமல்படுத்தப்பட்டது. இதனால் சாலைகளில் நடமாடுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். புனேயில் சாலைகளில் திரிந்தவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதே போன்று டெல்லியின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்ட போதும் தடையை மீறி சாலையில் நடமாடியவர்கள் மீது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்தனர். ஆயினும் மருந்துக் கடைகளில் முகக்கவசம், சானிட்டைசர்கள், இருமல் சளி மருந்துகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டமாக காட்சியளித்தனர்.

திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு போலீசார் சாலையில் திரிவோரை விரட்டியடித்தனர்.ஊரடங்கை மீறி நடமாடியதாக கேரளாவில் மட்டும் 402 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments