இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

0 6510

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியுள்ளது.

மும்பை கல்யாணில், கொரோனா தொற்றுடன் அமெரிக்காவில் இருந்து வந்த நபர் தொற்று இருப்பது தெரியாமலேயே சுமார் 1000 பேருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். மேலும், ரயிலில் பயணம் மேற்கொண்டதுடன் திருமணம் ஒன்றிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

ரயில்களில் பயணம் செய்தவர்களில் ஏற்கனவே 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், வரும் 31 ம் தேதி வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களும் ஓடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில், பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வயதான அப்பெண்மணிக்கு கொரோனா இருப்பது கடந்த 17ஆம் தேதி கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அப்பெண்ணின் மகன், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் துபாயிலிருந்து திரும்பிய நபர் கொரோனா பரிசோதனையை தவிர்த்த நிலையில், அவர் மூலமாக அவரது குடும்பத்தினர் இருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. அவரது கடையில் பணிபுரியும் 8 பேருக்கும் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

பிரான்சிலிருந்து தாயகம் திரும்பிய ஆந்திராவை சேர்ந்த நபர் அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறி, வெகுவிமரிசையாக திருமணம் செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டதால் அம்மாநில அதிகாரிகள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா சமூக விலக்கில் இருப்பவர்கள் வீடுகளில் "இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்" என நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி விலகியிருக்கச் செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 200 பேர் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்று ஏற்படும் நபர்களில் 80 சதவிகிதம் பேருக்கு லேசான காய்ச்சல் மட்டும் ஏற்படும் என்றும், அவர்கள் தாமாகவே குணமடைந்து விடுவார்கள் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். மேலும், முடிந்தவரை நோய்த்தொற்று உள்ளவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவ உலகில் கண்களுக்கு தெரியாத வகையில் நோய் தொற்றுகளை அதிக எண்ணிக்கையில் பரப்பும் நோயாளியை super-spreader என்று அழைக்கின்றனர். தற்போதைய நிலையில் கொரோனாவை பரப்பும் super spreaders இந்தியாவிலும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் குஜராத்தின் அகமதாபாத்தில் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பொதுமக்கள் கூடுமிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் எந்திரங்களின் உதவியுடன் கிருமி நாசினி தெளித்தனர். 

உத்தரப்பிரதேசத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் 25ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரயாக்ராஜ் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது. அதேநேரத்தில் கான்பூரில் உள்ள காய்கறிச் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதாகவும், இதனால் விலையும் வழக்கத்தைவிடக் கூடுதலாக இருந்ததாகவும் பொதுமக்களும் வணிகர்களும் தெரிவித்தனர். 

அரியானா மாநிலம் குருகிராமில் மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே பால் விற்பனை மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments