75 மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு..!

0 6835

டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், புதுச்சேரி உள்பட நாட்டின் 80 முக்கிய நகரங்களில் 31ம் தேதி வரை அனைத்து அலுவல்களும் ரத்து செய்யப்பட்டு முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம் , ஈரோடு உள்பட 75 மாவட்டங்களில் உள்ள 80க்கும் மேற்பட்ட நகரங்களில் இம்மாதம் 31ம் தேதி வரை லாக் அவுட் செய்ய மத்திய அரசு பரிந்துரைசெய்துள்ளது. இக்காலக்கட்டத்தில் அத்தியாவசிய சேவைகளான பால் ,வங்கி , மருத்துவம், காவல்துறை போன்றவை மட்டுமே செயல்படும். உணவகங்கள், போக்குவரத்து, பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருக்கும். மக்கள் வீதிகளில் அவசியமில்லாமல் நடமாடக்கூடாது. 

டெல்லியில் நேற்று மக்கள் ஊரடங்கு முழு அளவில் கடைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணி முதல் மார்ச் 31 வரை முழு அடைப்பு அமல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதனால் டெல்லியில் கரோல்பாக், கன்னாட்பிளேஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று பெங்களூர், ஹைதராபாத், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஸ்ரீநகர், ஜம்மு, பனாஜி, ஆக்ரா, உள்பட பல்வேறு முக்கிய நகரங்களிலும் இம்மாதம் 31ம் தேதி வரை முழு அடைப்பு செய்யப்பட்டுள்ளது. அலுவலகங்கள் , பள்ளிகள், திரையரங்குகள் , கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் அவசியம் ஏற்பட்டாலொழிய வீடுகளை விட்டு வெளியே வரவோ கூட்டமாக கூடவோ வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மும்பையில் முழு அடைப்பு இல்லையென்ற போதும் அதன் உயிர்நாடியான மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு மக்கள் கூடுவதற்கும் பயணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்ட்ராவில் புனே போன்ற தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கு மார்ச் 31 வரை முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் நடமாட வேண்டும் என்றும் அவசியமில்லாமல் கூட்டம் சேர்த்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதனிடையே ஆந்திர மாநில அரசும் முழு அடைப்பை அறிவித்துள்ளது.மார்ச் 31ம் தேதி வரை பேருந்துகள் நிறுத்தப்படுவதாக ஆந்திர போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே முதன்முறையாக மார்ச் 31 வரை அனைத்து ரயில் போக்குவரத்துகளும் புறநகர் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே நாசிக்கில் 10 முதல் 500 ரூபாய் வரையிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments