மெரீனாவுக்கு போட்டாச்சு பூட்டு... மிரட்டும் கொரோனா !

0 2783

கொளுத்தும் கோடை வெயிலுக்கு வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சென்னை மாநகர மக்கள், மாலை நேரத்தில் கடற்கரைக்கு சென்று காற்று வாங்க, தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மிரட்டும் கொரோனாவால், மெரீனாவுக்கு இப்போது பூட்டு போட்டாச்சு. இதுகுறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு : - 

உலகம் முதல் உள்ளூர் வரை, எங்கு திரும்பினாலும், இப்போது கொரோனா பேச்சு தான் உலா வருகிறது . அங்கிங்கெணாத படி எங்கும் நிறைந்திருக்கும் கொரானோ அச்சம், சென்னை கடற்கரைகளையும் அசைத்து பார்த்துள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு , தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கடற்கரை கூட அதற்கு தளம் அமைத்து விடக்கூடாது என்ற காரணத்தினால், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

திடீர் அறிவிப்பை தொடர்ந்து, மாலை 3 மணி அளவில் மெரினாவுக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளும் , காவல்துறையினரும் அங்கிருந்த பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டனர். சிறு - குறு கடைகளை அடைக்கச்சொல்லி, வியாபாரிகளையும் வெளியேற்றினர்.

சுட்டெரிக்கும் வெயிலிலும் காதலித்து கொண்டிருந்த ஜோடிகளையும் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டு, வெளியேற்றனர். பின்னர், கடற்கரைக்கு செல்லும் உட்புற பாதைகள் அனைத்தும் தடுப்புகளை அமைத்து, காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். அனைவரும் வெளியேறியதை உறுதி செய்த பின், மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி தெளித்து, அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

இதேபோல, பெசன்ட் நகர், திருவான்மியூர் மற்றும் பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளுக்கும் பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மறு உத்தரவு வரும் வரை, கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இக்கட்டான சூழலில், பொது இடங்களில் பெருமளவில் கூடுவதை மக்கள் தவிர்த்து, சுய கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதே, கொடிய கொரோனா பரவாமல் தடுக்க ஒரே தீர்வு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments