புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

0 1092

தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் பற்றிச் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, ஒன்பது கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மூவாயிரத்து 501 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

17 கோடியே 87 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்குப் புதிய தலைமை அலுவலகக் கட்டடங்களும், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடமும் கட்டப்படும் எனத் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் செம்மடுவில் 15 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூட்டுறவுப் பயிற்சி நிலையம் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டார். மாநிலம் முழுவதும் 189 இடங்களில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஒரு லட்சம் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீனச் சேமிப்புக் கிடங்குகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் எனத் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் 60 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும், ஹெலன் நகர், ராஜாக்க மங்கலம், கொட்டில்பாடு ஆகிய ஊர்களில் 39 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். வரும் கல்வியாண்டில் 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments