ம.பி. விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை

0 702

மத்திய பிரதேச சட்டப்பேரவையில்  பெரும்பான்மை நிரூபிக்க கமல்நாத் அரசுக்கு உத்தரவிடக்கோரி பாஜக தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று  விசாரணை நடத்தவுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பிலும் பாஜகவுக்கு எதிராக தற்போது மனு தொடரப்பட்டுள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜிநாமா கடிதம் கொடுத்ததையடுத்து, மத்திய பிரதேசத்தை ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலை நேரிட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சிவ்ராஜ் சிங் செளஹான் சார்பில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க கமல்நாத் அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பேரவை சபாநாயகர், முதலமைச்சர் கமல்நாத், 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து மனு மீது உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை நடத்தவுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரை கடத்தி சிறை வைத்திருப்பதாக குற்றம்சாட்டி, இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள 16 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் விடுவிக்க உத்தரவிடும்படி, அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

 

இதனிடையே, பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 21 பேர் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலுக்கு சென்று அவர்களை சந்திக்க அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளரும், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் வந்தார். அப்போது அவரை அங்கிருந்த போலீஸார் ஹோட்டலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதை கண்டித்து ஹோட்டல் அருகே தரையில் அமர்ந்து திக்விஜய் சிங்கும், காங்கிரஸ் தொண்டர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, திக் விஜய் சிங்கையும், காங்கிரஸ் தொண்டர்களையும் கர்நாடக போலீஸார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments