கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், கோயில்கள் மூடல்... வெறிச்சோடிய சாலைகள்

0 3125

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் சாலைகள் மற்றும் பொது இடங்களில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன. 

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தலால்  பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கோயில் வளாகம் மட்டுமின்றி அங்குள்ள சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.  

சேலம்: மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டில் 200 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் மூடப்பட்டு, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், படகு இல்லம் மற்றும் சாலையோர கடைகளும் மூடப்பட்டதால் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

சேலத்தில் 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இன்று காலை முதல் மூடப்பட்டு, அவற்றின்முன்பு வரும் 31 ஆம் தேதி வரை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடியது.

குமரி: எல்லைப்பகுதியான களியக்காவிளையில் கேரளாவில் இருந்து தமிழகத்தில் நுழையும் சுற்றுலா வாகனங்கள் தனியார் வாகனங்கள் அரசுப் பேருந்துகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. கிருமிநாசினி திரவம் அனைத்து வாகனங்களிலும் தெளிப்பதோடு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என தெர்மாமீட்டர் மூலம் வாகன ஓட்டிகளிடம் சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேட்டூர்:

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் சேலம் மாவட்டம்  மேட்டூர் அணை பூங்கா இன்று காலை முதல் மூடப்பட்டு, வெறிச்சோடி காணப்படுகிறது. ஒன்றிரண்டு மீன் கடைகள் மட்டும் திறந்திருந்த நிலையில் அவற்றை வாங்க யாரும் இல்லாத நிலை உள்ளது.

கடலூர்: - புதுவை மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆள்பேட்டை வாகன சோதனை மையத்தில் மருத்துவர்கள் குழு அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுவையில் இருந்து  நான்கு சக்கர, இரு சக்கர வாகனத்தில் வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து செல்கின்றனர். 

விருதுநகர்: மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் வருகை 75 சதவீதம் குறைந்தது. மலை ரெயில் பயணிகள் கூட்டமின்றி இயக்கப்பட்டது.

இங்குள்ள 3 திரையரங்குகளும், கேரளா, கர்நாடகா எல்லையோரப்பகுதி உணவு விடுதிகளும் மூடப்பட்டன. வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த 8 பேரை கண்காணிப்பில் வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

கொரோனா பரவல் தடுப்பின் ஒரு பகுதியாக தேனி மாவட்ட எல்லைகள் வழியாக கேரள ஏலத்தோட்டங்களுக்கு கூலி வேலைக்குச் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளாவின் இடுக்கி, குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை போன்ற பகுதிகளிலுள்ள ஏலத்தோட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து ஏராளாமானோர் கூலிவேலைக்கு சென்று திரும்புகின்றனர்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் இவர்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏலத்தோட்ட தொழிலாளிகளை ஏற்றி வரும் வாகனங்கள் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றன. மருத்துவக் குழு ஒன்றும் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments