மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரிடம் ஐ.டி விசாரணை.!

0 1293

பிகில் பட வருமான வரிச் சோதனையின் போது நடிகர் விஜயிடம் கைப்பற்றப்பட்ட அவரது சம்பளம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். 

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் வருவாயை மறைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பிகில் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் குழுமம், பைனான்சியர் அன்புசெழியன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி சுமார் 75 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

அப்போது மாஸ்டர் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்த நடிகர் விஜயை நேரில் சென்று அழைத்து வந்த அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டில்  வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில ஆவணங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அறிக்கை அளித்தது.

அந்த ஆவணங்களில் ஒன்று மாஸ்டர் படத்தின் சம்பளம் தொடர்பானது. நடிகர் விஜயின் கணக்கில் இருந்த ஒரு பெரும் தொகைக்கு அது மாஸ்டர் படத்திற்கான சம்பளத்தின் முன்தொகை என அவர் விளக்கமளித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான நடிகர் விஜயின் ஆடிட்டர் மேலும் சில ஆவணங்களையும் அளித்து விளக்கமளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜயின் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலணியில் உள்ள லலித் குமாரின்ப் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்திற்கான முன் தொகை அவரது கணக்கில் இருந்து தான் அனுப்பட்டதா என ஆவணங்களை கேட்டு ஆய்வு செய்துள்ளனர்.

பின்னர் லலித்குமாரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றுள்ளனர். மாஸ்டர் படத்தை நடிகர் விஜயின் உறவினரான ஜோ பிரிட்டோ என்பவர் தான் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஆடியோ வரும் ஞாயிற்று கிழமை வெளியிடப்பட உள்ள நிலையில் மாஸ்டர் பட இணை தயாரிப்பாளரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments