திமுக எம்.எல்.ஏ சரவணக்குமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

0 487

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக புகார் கூறப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பலம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக கூறி சரவணக்குமாரை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர் . மேலும் அங்கிருந்து 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அம்பலம் கிராம மக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது கட்சியினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தமிழன் ராஜா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்  சரவணகுமார் மற்றும் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதியில் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா? என்று போலீசார் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.
நேற்று மாலை 6 மணியுடன் அங்கு பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்கு சேகரிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை 6 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், விக்கிரவாண்டி, பனையபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் வெளியாட்கள் தங்கி உள்ளார்களா என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தேர்தல் பணிக்கு 3 துணை ராணுவ படையை சேர்ந்த 300 பேர் மற்றும் 7 தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்த போலீசார் மற்றும் மூன்று கூடுதல் எஸ்.பி, 19 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments