சிலம்பாட்ட சாம்பியன்... 6 வயதில் உலக சாதனை...!

0 264

கோவையைச்சேர்ந்த 6 வயது சிறுமி பிரகதி சிலம்பாட்ட போட்டியில், இரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்கள் வென்று  உலக சாம்பியன் பட்டம் வென்றதுடன், 6 வயதில் இந்த சாதனை நிகழ்த்திய உலகின் முதலாவது சிறுமி என்ற பெருமையை பெற்றுள்ளார். 

சாதிக்க வயது ஒரு தடையல்ல, தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் போதும் உலகை திரும்பி பார்க்க வைக்கலாம் என்பதற்கு உதாரணமாக  திகழ்கிறார் கோவையை சேர்ந்த 6 வயது சிறுமி பிரகதி. நமது கலாச்சாரம், பண்பாடு தொடர்பான சிலம்பாட்ட போட்டியில் உலக சாம்பியன் ஷிப் பட்டம் வென்று உலக அரங்கில் தமிழகம் மற்றும் கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார். 

பிரகதி 4 வயது இருக்கும் போதே பள்ளியில் மற்ற மாணவிகள் சிலம்பம் ஆடுவதைப்பார்த்து இவரும் ஆர்வத்தில் கம்பெடுத்து சுழற்றியுள்ளார். இதனைக்கண்ட தந்தை உதயேந்திரன், பிரகதி சிலம்ப பயிற்சி பெற  ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஒற்றைச் சுருள் வாள் மற்றும் இரட்டைச் சுருள் வாளில் சிறந்து விளங்கினார்.

6 வயதான பிரகதி மலேசியாவில் கடந்த 2 ஆம் தேதி நடந்த 6 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான உலக சிலம்பாட்ட சாம்பியன் போட்டியில் பங்கேற்றார். இதில் ஒற்றைச்சுருள் மற்றும் இரட்டைச் சுருள் பிரிவில் அவர் 9 வயது மலேசிய சிறுமியை வீழ்த்தி, இரு தங்கப்பதக்கங்களையும், குழு போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார். இப்போட்டியில் உலக அளவில் 6 வயதில் சிறுமி ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அதிலும் பிரகதி இரு தங்கப்பதக்கங்களை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் தெற்காசியா, ஆசியா மற்றும் உலக அளவில் நடந்த 30  போட்டிகளில் பங்கேற்ற பிரகதி தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று 50 பதக்கங்களை வென்றுள்ளார். இது தவிர, மான் கொம்பு மடுவு மற்றும் குங்ஃபு  கலைகளிலும் பிரகதி இளம் சாதனையாளர் விருது பெற்று கோவையின் பெருமைமிகு அடையாளமாக பாராட்டப்படுகிறார்.
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments