22 ஆண்டுகளாக விவாகரத்து கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

0 450

மீள முடியாத நிலைக்கும் மரணித்த நிலைக்கும் சென்றுவிட்ட திருமண வாழ்க்கையில் சிக்கிய ஒருவருக்கு விவாகரத்து வழங்கி திருமணத்தை ரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமண சட்டத்தின்படி திருமண உறவு முறிவு விவாகரத்துக்கான காரணமாக ஏற்கப்படுவதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் இருபது வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களில் விவாகரத்து கோரிய நிலையில், அவர் மனைவி உடன்படாததால் விவாகரத்து மறுக்கப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் அவரது மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர், மீண்டும் மீளவே முடியாதபடி திருமண உறவு முறிந்து விட்டதால் விவாகரத்து பெறுவது நீதிக்குட்பட்டதாகும் என்று தெரிவித்தனர்.

22 ஆண்டுகளாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தாலும் கூட விவாகரத்து வழங்கப்படுவதில் சட்டத்தில் குறைபாடு உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசு விவாகரத்து சட்டத்தை திருத்தும்படி முந்தைய பல தீர்ப்புகளின் போது பலமுறை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் சட்டம் மாற்றப்படாத நிலையில் திருமண உறவு அடிப்படையிலேயே ஆட்டம் கண்ட நிலையிலும் சட்டரீதியாக நீடித்து வந்தது.

1978 மற்றும் 2009ம் ஆண்டுகளில் சட்டக்கமிஷனும் மத்திய அரசுக்கு விவாகரத்து சட்டத்தை திருத்தும்படி பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இந்த வரலாற்றை நினைவுகூர்ந்த நீதிபதிகள், 22 ஆண்டுகள் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதை ஏற்பதாக கூறினர்.

இதையடுத்து சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விவாகரத்து வழங்கி திருமண உறவை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments