2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

0 1251

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்து இரு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 13 சென்டி மீட்டரும், ராயக்கோட்டை, வாழப்பாடியில் 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் அடுத்த இருநாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை - நாகைப்பட்டினத்திற்கு இடையே பூமியில் இருந்து 3 முதல் நான்கு கிலோ மீட்டர் உயரத்தில் காற்றின் சங்கமம் நிலவுகிறது என்றார். தமிழகத்தின் தெற்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் வரும் காற்று சங்கமிப்பதால், மழைக்கான சூழல் உருவாகி உள்ளதாக அவர் கூறினார்.

இதனால் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களிலும், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதே நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறினார். ஜூன் 1-ஆம் தேதி முதல் இன்றுவரையிலான கால கட்டத்தில் தமிழகத்தில் இயல்பு அளவான 18 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது என்றும், சென்னையில் சராசரி மழை அளவான 28 சென்டி மீட்டரை தாண்டி, 33 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது என்றும் இது இயல்பை விட 5 சென்டி மீட்டர் அதிகம் என்றும் புவியரசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments