45-வது நாளாக தொடரும் அத்திவரதர் தரிசனம்

0 612

காஞ்சிபுரத்தில் 45 வது நாளாக அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி  நடிகர் ரஜினிகாந்த், ஆகியோர் தரிசனம் செய்தனர்.அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட மறுத்துள்ள உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

45-வது நாளான இன்று அத்திவரதருக்கு பன்னீர் ரோஜா நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவே வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிகாலை நடை திறந்ததும் தரிசனம் செய்தனர். நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் நள்ளிரவில் வந்து தரிசனம் செய்தார்.அவர் அத்திவரதருக்கு பட்டாடை செலுத்தி அர்ச்சனை செய்து வழிபட்டார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகனும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி, சகோதரர் ரேவண்ணா ஆகியோர் குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். அவர்களை பட்டாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று அத்திவரதர் வரலாற்றை எடுத்துக்கூறி, புகைப்படங்கள் வழங்கினர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு போலீசார் அவர்களை சிறப்பு தரிசன வாயில் வழியாக அழைத்து வந்தனர்.

இதற்கிடையே தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி இது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என அறநிலைய துறை அறிவித்துள்ளதாக அரசுத்தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வரும் 16-ஆம் தேதி மாலையுடன் தரிசனம் முழுமையாக நிறைவு பெறும் என்றும் 17-ஆம் தேதி பொது தரிசனம், வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. தரிசனம் எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார். அன்று அத்திவரதரை குளத்திற்குள் வைப்பதற்கான பணிகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

ஆரம்பம் முதலே சிறு அசம்பாவிதத்திற்கும் இடமளிக்காத வகையில் காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில் நாளை மாலை 5 மணியுடன் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதால் தற்போது சிறப்பு தரிசன வரிசையில் அதிக கூட்டம் காணப்படுகிறது. நாளை ஆடி கருட சேவையை முன்னிட்டு பிற்பகல் 12 மணியுடன் கிழக்கு ராஜகோபுரம் நடை அடைக்கப்படுகிறது.

அதன் பிறகு கோவில் வளாகத்துக்குள் இருப்பவர்கள் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம், கருட சேவை முடிந்த பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அத்திவரதரை தரிசித்துவிட்டு வந்த விமலா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments