கொள்ளையடிக்க வந்தவனின் கையை கடித்து ஓட விட்ட பெண்! 4 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார்!!

0 1748

சென்னை புறநகரில், வாயில் துணியை அடைத்து கொள்ளையடிக்க முயன்றவனின் கையைக் கடித்து விட்டு கூச்சலிட்ட பெண்ணால் தலை தெறித்து தப்பி ஓடிய இளைஞர்கள் 2 பேர், கொள்ளை அடிக்க வந்த இடத்தில் விட்டு சென்ற தங்கள் இரு சக்கர வாகனத்தை எடுக்க திரும்பிச் சென்ற போது போலீசாரிடம் வசமாக சிக்கினர்.

சென்னையை அடுத்துள்ள அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் உள்ளது, இந்த 19 அடுக்கு மாடி குடியிருப்பு. இங்குள்ள வீடு ஒன்றுக்குள் பட்டப்பகலில் புகுந்தனர், இளைஞர்கள் 2 பேர். வீட்டில் இருந்த ஜெயா என்ற பெண்ணின் பின்னால் சென்று அவரது வாயில் துணியை வைத்து அடைக்க முயன்றதாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த ஜெயா, வாயைப் பொத்திய கையை நறுக்கென்று கடித்துவிட்டு கூச்சலிடத் துவங்கினார்.

உடனே கையை உதறி விட்டு ஜெயாவை அடித்துத்தள்ளிவிட்டு அந்த இருவரும் தப்பிச் சென்றனர். இது குறித்து குடியிருப்பு வாசிகள் தெரிவித்த தகவலின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது தங்களுக்கு எதிரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்துமாறு போலீசார் கூறியுள்ளனர். அந்த 2 பேரும் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் வலுத்து அவர்களை போலீசார் துரத்தியதாக தெரிகிறது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பிரதான சாலை, அத்திப்பட்டு, ஐ.சி.எப், காலனி வழியாக அயப்பாக்கம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சேஸிங் நடந்துள்ளது.

அயப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகே இருவரையும் மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் தங்க சங்கிலி, நெத்திச்சுட்டி உள்ளிட்ட 4 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், 27 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 5 செல்போன்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.

இருவரையும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, அவர்கள் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, கலையரசன் என்பதும் அவர்கள் மீது ஜெ.ஜெ. நகர், அண்ணா நகர் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

திருமுல்லைவாயலில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடித்துவிட்டு, அத்திப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றதாகவும், ஜெயா கத்தியதால் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடியதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். சிறிது நேரம் கழித்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் கூறிய அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments